உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? செலரி ஜூஸ் ட்ரை பண்ணிப் பாருங்க!

natural-summer-drinks
natural-summer-drinks
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வெயில் கால நோய்களான நீர்ச்சத்து இழப்பு, வயிற்றுக் கோளாறு மற்றும் சோர்வை தடுக்கவும், உடலைக் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள உதவும் சில எளிய பானங்கள் உள்ளன. கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சில இயற்கை பானங்களை இப்பதிவில் காணலாம்.

செலரி ஜூஸ்:

செலரி தண்டுகள் 1 கட்டு

எலுமிச்சை ஒரு மூடி

இஞ்சி சிறு துண்டு

செலரி தண்டுகளை நன்றாகக் கழுவி துண்டுகளாக வெட்டவும். இஞ்சித்தண்டை தோல் நீக்கி அதனுடன் சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைக்கவும். பிறகு இதனை வடிகட்டி அந்த சாறில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் அதிகம் கொண்ட செலரி வெயில் காலத்துக்கு ஏற்ற ஒன்றாகும். இதிலுள்ள நுண்ணூட்டச் சத்துகள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும். செலரிக்கு சிறுநீர் பெருக்கி பண்புகள் இருப்பதால், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

நன்னாரி சர்பத்:

நன்னாரி வேர் 50 கி.

சர்க்கரை 250 கி.

தண்ணீர் 5 கப்

எலுமிச்சம் பழம் 2

நன்னாரி வேர்களை சுத்தம் செய்து நன்கு பொடித்துக்கொள்ளவும். பின்பு 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் சிறிது நேரம் ஆறவிட்டு வடிகட்டவும். வடிகட்டிய நன்னாரி நீரில் சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு காய்ச்சி எடுக்கவும். தேவைப்படும் நேரத்தில் நன்னாரி சர்பத்தில் குளிர்ந்த நீர் கலந்து பருகலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் சிறுநீர் நன்றாக வெளியேறவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
நாக்கில் எச்சில் ஊறும் காரம்... பாண்டிச்சேரி ஸ்டைல் ஸ்பைசி கொரியன் நூடுல்ஸ் ரகசியம் இதோ!
natural-summer-drinks

பார்லி தண்ணீர்:

பார்லி 100 கிராம்

தண்ணீர் 2 லிட்டர்

பார்லியை வெறும் வாணலியில் போட்டு சூடு வர வறுக்கவும். பிறகு அதில் இரண்டு லிட்டர் தண்ணீர்விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியதும் வடிகட்டி குடிக்க கோடை காலங்களில் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள் சரியாகும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் நீங்குவதுடன், சிறுநீரக கற்களை வெளியேற்றவும் உதவும் இந்த பார்லி தண்ணீர்.

பானகம்:

புளி கொட்டைப்பாக்களவு

வெல்லம் 100 கிராம்

தண்ணீர் 400 மி.லி (அ) 2 கப்

ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்

சுக்குப் பொடி 1/2 ஸ்பூன்

ரெண்டு கப் தண்ணீரில் வெல்லம்,புளி இரண்டையும் சேர்த்து நன்கு கரைக்கவும். புளிச் சக்கையை எடுத்துவிட்டு ஏலக்காய்தூள், சுக்கு பொடி கலந்து குடிக்க வெயிலுக்கு இதமான, அதிகம் செலவில்லாத இயற்கை பானம் தயார். இந்த பாரம்பரிய பானம் தாகத்தை தணித்து, வெயிலால் ஏற்படும் சோர்வை நீக்கி உடனடி ஆற்றலை தரக்கூடியது.

குறிப்பு:

புளி வேண்டாம் என்று நினைப்பவர்கள் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் கலந்துகொள்ளலாம். சர்க்கரை அதிகம் கலந்த செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இம்மாதிரியான இயற்கை பானங்களை அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

logo
Kalki Online
kalkionline.com