நவராத்திரி ஏன் பெண்களுக்கு உகந்த பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?

நவராத்திரி நவ கட்டுரைகள் - 2
Navratri Sundal Naivedyam
Navratri Sundal Naivedyam
Published on

வராத்திரி என்பது ஒன்பது நாள் விழாவாகும். ஒரு வருடத்தில் எத்தனையோ பண்டிகைகள், எத்தனையோ திருவிழாக்கள் வந்து போகின்றன. ஆனால், இந்த நவராத்திரி மட்டும் முக்கியமாக பெண்களுக்கான பண்டிகை என்றே கூறப்படுகிறது. அப்படி அமைந்தும் இருக்கிறது. கொலு வைப்பவர்கள் வீடு வீடாகச் சென்று குங்குமம் கொடுத்து,  அந்த வீட்டுப் பெண்களை தம் வீட்டு கொலுவிற்கு வரும்படி அழைப்பார்கள். ஆண்கள் வருவதை தடுக்கவில்லை. ஆனால், பெண்கள் வருவது சிறப்பு. எதனால் பெண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது? சக்தி என்பவள் பெண்ணின் அம்சம். ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்கிற ஒரு சொலவடையும் உண்டு.

நவராத்திரி என்றாலே அனைவர் மனக்கண் முன் தோன்றுவது குழந்தைகள் வித விதமாக அலங்காரம் செய்து கொள்வதும், கொலுப்படிகளும், சுண்டல்களும்தான். எதனால் நவராத்திரிக்கு சுண்டல் கொடுக்கும் பழக்கம் வந்தது? ஒன்பது நாட்களிலும் சுண்டல் செய்து அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, வருபவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மங்கலப் பொருட்களுடன் சுண்டல் பொட்டலமும் தரும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. கிப்ஃட் தருவது என்பது இப்பொழுதைய நாகரிகமாக ஆகிவிட்டது.

மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் பூமி வறண்டு போகாமல் செழிப்புடன் இருப்பதற்காக மழையை தருவித்துக் கொடுத்தார்கள். அந்த மழை நீர் பூமியில் விழுந்த பிறகு தானியங்கள் முளைத்துத் தோன்றின. அந்தத் தானியம் என்பது சக்தியாக பாவிக்கப்படுகிறது.  சக்தி என்பது பெண் அம்சமாக இருப்பதால், சக்தியாகத் திகழும் பெண்களுக்கு தானியத்தால் செய்யப்படும் சுண்டல் வகைகளைக் கொடுக்கிறோம் .

ஒன்பது நாட்களிலும் சுண்டலை நைவேத்தியம் செய்ய இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது, மகிஷாசுரனை வதம் செய்வதற்காக பராசக்தியானவள் காளி மாதாவாக அவதாரம் எடுத்து ஒன்பது நாட்கள் போராடி அவனை அழித்தாள். இந்த ஒன்பது நாட்களும் அந்த அசுரனை வீரமாக, உடம்பில் சக்தி கொண்டு, சோர்வு இல்லாமல் போராட வேண்டும் என்பதற்காகவே போஷாக்கு நிறைந்த, புரதம் நிறைந்த சுண்டல் வகைகளை அம்பாளுக்கு நாம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், ஐப்பசி மாதத்தில் மழைக்காலமாக இருக்கும். அப்பொழுது சரும நோய்கள் அதிகமாக உண்டாகும். புரதச்சத்து மிக்க இந்த சுண்டல் வகைகளை உட்கொள்ளும்பொழுது, நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி, சருமம் பராமரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சரி, இனி ஒன்பது நாட்களிலும் என்னென்ன சுண்டல் செய்யலாம்? அவற்றை அம்பாளுக்கு நைவேத்தியம்  செய்யும்பொழுது என்னென்ன பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.

முதல் நாள், பிரதமையன்று,  மகேஸ்வரி என்று வணங்கப்படும் அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதைச் செய்வதால் வறுமை நீங்கிவிடும். அகால மரணம் ஏற்படாமல் வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள் த்விதீயை அன்று ராஜராஜேஸ்வரியாக வணங்கப்படும் அம்பாளுக்கு  வேர்க்கடலை சுண்டல் நைய்வேத்தியம் செய்யப்படுகிறது. இதனால் ரோகம் நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மூன்றாம் நாள் திருதீயை அன்று வாராகியாக அம்பாளை வணங்கி, காராமணியை சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தால் தனம் பெருகும். தானியங்கள் குறைவின்றி வீட்டில் இருக்கும். வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள் சதுர்த்தி அன்று மகாலட்சுமிக்கு பட்டாணி சுண்டல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லை நம்மை அணுகாமல் இருக்கும்.

ஐந்தாம் நாள் பஞ்சமி அன்று மோகினி ரூபமான சக்திக்கு பயத்தம் பருப்பு சுண்டல் நைவேத்தியம் செய்தால் நாம் விரும்பிய,  நமக்கு சேர வேண்டிய செல்வங்கள், பிறர் கைக்கு போகாமல் நம்மிடம் வந்து சேரும்.

ஆறாம் நாள் சஷ்டி அன்று சண்டிகா தேவிக்கு பச்சைப் பயறு சுண்டலை நைவேத்தியம் செய்தால், வழக்கு விவகாரங்கள் நல்லபடியாக, சாதகமாக முடியும். கவலைகள் மறையும்.

இதையும் படியுங்கள்:
குலசை முத்தாரம்மன் கோவில் உருவான கதை தெரியுமா?
Navratri Sundal Naivedyam

ஏழாம் நாள் சப்தமி அன்று சாம்பவிக்கு கொண்டக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்தால், வேண்டிய வரங்கள் கைகூடும்.

எட்டாம் நாள் அஷ்டமி அன்று நரசிம்ம தாரணிக்கு மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்தால், இஷ்ட சித்தி உண்டாகும். வளம் பெருகும்.

ஒன்பதாம் நாள் நவமி அன்று பரமேஸ்வரி தேவியானவளுக்கு, வேர்க்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்தால் நமக்கு ஆயுள் கூடுவதோடு, சந்ததிகளுக்கு நன்மை உண்டாகும்.

‘நவ நாட்களும் முடிந்து விட்டதே. சுண்டல்கள் செய்து நைவேத்தியம் செய்தாயிற்று’ என்று நினைத்துக் கொண்டு, பத்தாம் நாளன்று முக்கியமாக நைவேத்தியம் செய்ய வேண்டியதை விட்டு விடக்கூடாது. முக்கியமாக, அம்பாளுக்கு அக்கார அடிசலும்,  சுக்குப்பொடி, வெல்லம் கலந்த கலவையை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏனென்றால், அன்று வெற்றி கண்ட நாள் அல்லவா? ஒரு இனிப்பு படைத்து விட்டு அஜீரணம் ஆகாமல் இருக்க சுக்கு வெல்லமும் கொடுக்க வேண்டும்.

இப்படி ஒன்பது நாட்களும் அம்பாளை ஆராதனை செய்து, ஒன்பது வகையான சுண்டல்களை நைவேத்தியம் செய்தால், தேவர்களுக்கும் கிடைக்காத ஒரு இன்பமான மன நிறைவும், பிணி இல்லாத வாழ்வும், வளமான வாழ்க்கையும் அமையும் என்று நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com