தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் 300 வருடம் பழமையான கோவிலாகும். இது திருச்செந்தூரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தை குலசேகரப்பாண்டியன் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு அன்னை முத்தாரம்மன் காட்சியளித்து அருள் புரிந்ததால், இவ்வூருக்கு குலசேகரபட்டினம் அல்லது குலசை என்ற பெயர் வந்தது.
மைசூருக்கு அடுத்து இங்குதான் தசரா திருவிழா வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக கோவில்களில் சிவபெருமானை லிங்க திருமேனியாக தான் தரிசிக்க முடியும். ஆனால், இக்கோவிலில் சிவபெருமானும், பார்வதிதேவியும் அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறார்கள். சிவபெருமானை ஞானமூர்த்தீஸ்வரன் என்றும் பார்வதிதேவியை முத்தாரம்மன் என்றும் இங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள்.
ஒருமுறை அகத்திய முனிவரை வரமுனி தொந்தரவு செய்த காரணத்தினால், அவருக்கு எருமை தலையாக மாறட்டும் என்று சாபம் விடுகிறார். அந்த எருமை தலை கொண்டவனே மஹிஷாசுரன் ஆவான். மஹிஷாசுரன் தவம் புரிந்து பல சக்திகளை பெற்று மக்களை துன்புறுத்த தொடங்குகிறான். இதனால் முனிவர்கள் பார்வதிதேவியிடம் சென்று முறையிட லலிதாம்பிகை தோன்றுகிறார்.
அந்த பெண் குழந்தை வெறும் 9 நாட்களில் முழுமையாக வளர்ந்துவிடுகிறார். இதையே நவராத்திரியாக கொண்டாடுகிறார்கள். 10 ஆவது நாளில் மஹிஷாசுரனை அழிக்கிறார். இந்த நாளையே தசரா பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
இது மிகவும் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கருதப்படுகிறது. இத்திருவிழாவை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இக்கோவிலில் கூடுவார்கள். மஹிஷாசுரனை மஹிஷாசுரமர்த்தினி அழிக்கும் நிகழ்வு அற்புதமாக அரங்கேற்றம் செய்யப்படுவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். சிவராத்திரி, ராகு பூஜையும் இங்கு கொண்டாடப்படும் மற்ற விஷேசமான பண்டிகைகளாகும்.
மக்களுடைய உடம்பில் ஏற்பட்ட முத்து போன்ற அம்மையை இந்த அம்மன் ஆற்றியதால், இவருக்கு முத்தாரம்மன் என்ற பெயர் வந்தது. முத்தாரம்மனிடம் விரதம் இருந்து வேண்டிக்கொண்டால், தொழுநோய் மற்றும் மனநல பிரச்னைகள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. சாதாரண கோவிலாக இருந்து இன்று உலக பிரசித்தி பெற்ற கோவிலாக மாறியிருப்பதற்கு முத்தாரம்மனின் சக்தியே காரணமாகும். குலசை மக்களின் குலதெய்வமாக முத்தாரம்மன் இருக்கிறார்.