
நவராத்திரி வந்துவிட்டாலே சுண்டலுக்கு முக்கியத்துவம் வந்து விடுகிறது. வகை வகையாய் சுண்டல் செய்து, தேவியருக்கு நைய்வேத்யம் செய்துவிட்டு நாமும் சாப்பிடுவோம். வித்தியாசமான இரண்டு சுண்டல் வகைகள்.
பச்சைப் பயறு வெல்ல சுண்டல்
தேவை:
பச்சைப் பயறு - 3 கப்
வரமிளகாய் - 2
வெல்லத் தூள் - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை:
பச்சைப் பயறை வானொலியில் சற்று வறுத்து விட்டு உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும். வாணலியில் கடுகு, வரமிளகாய் தாளித்து, வெந்த பயறைக்கொட்டி நன்கு வெந்ததும், தேங்காய்த் துருவல் தூவி, வெல்லத்தூளை சேர்த்துக்கிளறி, இறக்கி வைக்கவும். சுவையான பச்சைப்பயறு வெல்ல சுண்டல் தயார்.
*****
கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்:
தேவை:
கடலைப்பருப்பு - 1 கப்
சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா அரை கப்
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
நெய் - ஒரு ஸ்பூன் -
கடுகு - அரை ஸ்பூன்
செய்முறை:
கடலைப் பருப்பை களைந்து ஒன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில் நீர் சேர்த்து வேகவைக்கவும். கடலைப் பருப்பை ஊறவைக்க வேண்டியது இல்லை. நீரும் அளவாக சேர்த்தால்தான் குழையாமல் வரும். வாணலியில் நெய்விட்டு கடுகு தாளித்து வெந்த பருப்பை போட்டுக்கிளறி சர்க்கரை மற்றும் தேங்காய்த் துருவலை தூவி கிளறி இறக்கி வைக்கவும். சத்தான, சுவையான கடலை பருப்பு இனிப்பு சுண்டல் தயார்.
******
சுண்டல் டிப்ஸ்
சுண்டலுக்கு கொண்டைக்கடலையை ஊறவைத்த பின்பு வெயிலில் ஒருமணி நேரம் வைத்துவிட்டு வேகவைத்தால் சுண்டல் சுருக்கம் இன்றி பெரிது பெரிதாக இருக்கும்.
சுண்டலுக்கு கடலையை ஊறவைக்கும் பொழுது சிறிது சமையல் சோடாவை சேர்த்துவிட்டு பிறகு கழுவி வேறு நீரை ஊறவைத்தால் விரைவில் வந்துவிடும்.
கடலைப் பருப்பு பாசிப்பருப்பு சுண்டல் செய்வதானால் முன்பே ஊறவைக்க வேண்டிய அவசியம் இல்லை.
சுண்டலில் கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்தால் நிறமும் அழகாக இருக்கும். சுவையும் கூடும்.
சுண்டலுக்கு தேங்காய் துருவலை சற்று வறுத்துப் போட்டால் சீக்கிரம் ஊசிப்போகாமல் இருக்கும். கொப்பரைத் துருவலையும் போடலாம்.