
நேந்திரம் பழ பாயசம்
செய்யத் தேவையான பொருட்கள்:
முக்கால் திட்டம் பழுத்த நேந்திரம் பழம்- மூன்று
வெல்லத்தூள் -ஒரு கப்
தேங்காய்ப் பால்- இரண்டு கப்
ஏலத்தூள்- அரை டீஸ்பூன்
நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நேந்திரம் பழத்தின் தோலை உரித்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதை ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு பழத்துண்டங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் பாதியை விட்டு நன்றாக கிளறி ஐந்து முதல் ஏழு நிமிடங்கள்வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
நேந்திரம் பழத்துண்டங்கள் நன்கு வெந்ததும் வெல்லக் கரைசலை அதில் ஊற்றி இரண்டுமாக சேர்ந்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும் . இப்போது அடுப்பை அணைத்துவிட்டு மீதி உள்ள தேங்காய்ப் பாலை பாயச கலவையில் சேர்த்து ஏலப் பொடியை தூவி நெய்யையும் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
நேந்திர பழ பாயாசம் ரெடி. சூட்டோடு சாப்பிட்டால் பழமும், நெய்யும், பாலும் சேர்ந்து சூப்பராக இருக்கும். செய்வதும் எளிது. நிறைய பொருட்களும் தேவையில்லை. ஆதலால் செய்து அசத்துங்கள்.
பலாக்காய் இட்லிப் பொடி:
செய்ய தேவையான பொருட்கள்:
பலாக்காயை சிறியதாக கீறி நன்றாக காய வைத்த பலாக்காய் வற்றல்- ஒரு கப்
கடலை பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்தது
உளுத்தம் பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்தது
காய்ந்த மிளகாய்- ஆறு
உப்பு- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பலா வற்றலை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பிறகு பருப்பு மற்றும் மிளகாயை அதோடு சேர்த்து நன்றாகப் பொடித்துக்கொண்டு கடைசியாக உப்பு சேர்த்து பொடியானவுடன் ஆறவைத்து ஒரு பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை தேங்காய் எண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் .சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.