பொதுவாக பன்னீர் என்றாலே எல்லோருக்குமே பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடியது இந்த பன்னீர் தான். டாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது மிக சுலபம். ஒரு முறை செய்துக்கொடுங்கள். பின் குழந்தைகள் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். அத்தனை ருசியாக இருக்கும். இப்போது செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை:
250g பன்னீரை சிறு சிறு க்யூப்ஸாக கட் பண்ணி கொள்ளவும். அடுப்பை மூட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சுட வைக்கவும். தண்ணீர் மிகவும் கொதிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிறிதளவு சூடானால் போதும்.
இந்த சுடுதண்ணீரில் பன்னீர் க்யூப்ஸை போட்டு 15 நிமிடத்திற்கு ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி பன்னீரை லேசாக பிழிந்து வெளியே எடுத்து வைக்கவும். அதிகமாக பிழிந்தால் பன்னீர் உடைந்து விடும். 15 நிமிடம் பன்னீர் ஊறுவதற்குள் மசாலாவை ரெடி செய்து கொள்ளலாம்.
மசாலா செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடான பிறகு சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும்.
ஒரு மீடியம் ஸைஸ் வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு நறுக்கிய இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும் (ஒரு சிறிய துண்டு இஞ்சி, பூண்டு ஐந்து அல்லது ஆறு பல்). பிறகு இரண்டு தக்காளியை நறுக்கி அதையும் நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அத்துடன் 10 முந்திரி பருப்புகளை போட்டு லேசாக வதக்கவும்.
பிறகு இதனோடு 2 ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் கார மிளகாயத் தூள், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ½ ஸ்பூன் கரம் மசாலாத் தூளையும் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கலவையை ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும். மசாலா ரெடி ஆகி விட்டது.
இதற்கு அடுத்தபடியாக அடுப்பில் வாணலியை வைத்து சூடான பிறகு சிறிதளவு பட்டரை போடவும். பட்டர் உறுகிய பிறகு 2 ஏலக்காய், 2 கிராம்பு, 2 துண்டு பட்டை ஆகியவற்றை போட்டு வறுக்கவும். லேசாக வறுத்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை போடவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும். அதிக காரம் விரும்புவர்கள் தேவைப்பட்டால் சிறிதளவு மிளகாய்த் தூளையும் சேர்க்கலாம்.
மசாலாவை சிறிது வதக்கிய பின் சிறிதளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை simல் வைத்து ஒரு ஏழு நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு எடுத்து வைத்துள்ள பன்னீர் க்யூப்ஸை சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீரை சேர்க்கவும்.
பன்னீரை சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைக்காதீர்கள். இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதித்தால் போதும். கடைசியாக சிறிதளவு கஸுரி மேதியை கையால் கசக்கி அதன் மேலே தூவி நன்றாக கலக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவும். விருப்பமுள்ளவர்கள் மேலே சிறிது க்ரீமை spray செய்து கொள்ளலாம். சுவையான டாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா ரெடி.