
1. நூடுல்ஸை கொதி நீரில் போட்ட பிறகு மசாலாவைப் போடுவதற்கு பதில், நீர் கொதித்ததும் முதலில் மசாலாவைப் போட்டு நன்கு கலக்கி பின்பு நூடுல்ஸை போட மசாலா நூடுல்ஸ் முழுவதும் சீராக இருக்கும்.
2. இடியாப்பம் மீந்து விட்டால், அவற்றை வெயிலில் காய வைத்து எடுத்தால் புது வகை வடகம் ரெடி.
3. கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி, இக்கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி கலந்து லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து பக்கோடா மாதிரி போடலாம்.
4. முறுக்கு மாவு, தேன்குழல் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால், டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவமாகி விடும்.
5. புளிச்சாற்றில் உப்பு, பெருங்காயம் சேர்த்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான புளி மிளகாய் தயார்.
6. காலையில் வடித்த சாதத்தை சூடு படுத்த, சாதத்தை சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாக கட்டி, இட்லித் தட்டில் சிறிது நேரம் வைத்திருந்து எடுங்கள். உதிர் உதிராக, சுடச்சுட அப்போதுதான் சமைத்தது போல சுவை குன்றாத சாதம் கிடைக்கும்.
7. துவையல் அரைக்கும் போது, சின்னக் கிண்ணத்தில் புளியைத் தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும் குக்கர் மீது வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து அரைக்க உபயோகித்தால் நன்றாக மசியும்.
8. அவசரப் பாயசம் தயாரிக்க நான்கு முந்திரிப்பருப்பு, கொஞ்சம் கசாகசா எடுத்து அம்மியில் அரைத்து கடலை மாவு சேர்த்துக் கொதிக்க விடவும். சாதத்தையும், சர்க்கரையையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பால் சேர்த்தால் திடீர் பாயசம் தயார்.
9. காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால் இவற்றை ஒன்றாகக் கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். ருசி மிகுந்த பொரித்த குழம்பாகி விடும்.
10. சாம்பார் பொடி அரைக்கும் போது, அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு வராது. சாம்பார் செய்யும் போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.