

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மத்திய அரசு இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாட்கள் கட்டாயக் காத்திருப்பு காலத்தை அமல்படுத்தியுள்ளதால், இல்லத்தரசிகள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அதேநேரம் வணிக பயன் பாட்டிற்கான சிலிண்டர் வினியோகம் நிறுத்தப் பட்டுள்ளதால் ஓட்டல்களும் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன.
இப்படியான சூழலில் கேஸ் சிலிண்டர் இல்லையென்றால் எப்படிச் சமைப்பது? என்ற கேள்விக்கு விடையாக, ஆரோக்கியமான மற்றும் 'அடுப்பில்லா சமையல் முறைகள்’ பற்றி பார்ப்போம்.
அடுப்பில்லாமல் சமைக்க முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்கு அடுப்பில்லாமல் சமைக்க முடியும் என்பதுதான் பதில். அதுவும் ஒரு விதமான கலைதான்.. அடுப்பில்லாமல் உணவை எளிதாகவும், சுவையாகவும் சமைக்க முடியும்.
இவ்வாறு சமைப்பதால் சத்தும் வீணாகாது. எரிபொருள் செலவும் மிச்சம். வாங்க இன்று அடுப்பில்லாமல் அவல் தயிர் சாதம், வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வாழைப்பூ பொரியல்
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ பொடியாக நறுக்கியது - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - விருப்பத்திற்கேற்ப
கேரட் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
ப.மிளகாய் - 1 அல்லது கொரகொரப்பாக பொடித்த மிளகு சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரையளவு தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறை கலந்த பின்னர் அதில் பொடியாக நறுக்கி வாழைப்பூவை சேர்த்து 5 நிமிடம் போட்டு வைக்கவும். இப்படி செய்வதால் வாழைப்பூ கசப்பு, துவர்ப்பு இருக்காது.
5 நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் வாழைப்பூவை நன்றாக பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய், கேரட் துருவல், கொத்தமல்லி, ப.மிளகாய் - 1 அல்லது கொரகொரப்பாக பொடித்த மிளகு சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான ‘நோ ஆயில், நோ பாயில்’ முறையில் சூப்பரான வாழைப்பூ பொரியல் ரெடி. இது சாலட் போன்று சுவையாக இருக்கும்.
அவல் தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
வெள்ளை அவல் - 1 கப்
புளிக்காத தயிர் - 1 கப்
ப.மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் துருவல் - சிறிளதவு
உப்பு - சுவைக்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு
கருப்பு திராட்சை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
செய்முறை:
ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அவலை தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரில் இல்லாமல் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
அடுத்து அதில் ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கேரட் துருவல், உப்பு, மாதுளம் முத்துக்கள், கருப்பு திராட்சை, தயிர் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இப்போது சுவையான சூப்பரான வெயிலுக்கு இதமான அவல் தயிர் சாதம் ரெடி.
கேஸ் இல்லையென்றால் கவலைப்படாதீங்க. இந்த மாதிரி சமையல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க...