

நுங்கில் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். நுங்கு ஒரு ஆரோக்கியமான கோடைகால உணவாகும். இதில் உள்ள நீர்ச்சத்து கோடை காலத்தில் உடலின் வெப்பத்தை உடனடியாக குறைக்க உதவுகிறது. நுங்கில் உள்ள ஆந்தோசயனின் வேதிப்பொருள் மார்பகப் புற்று நோயை தடுக்க உதவுகிறது.
நுங்கில் உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களான புரதம், கால்சியம், சோடியம், மாங்கனிசு உள்ளது. இதில் கலோரி குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுத்து செரிமானம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை போக்க உதவுகிறது. நுங்கை நாம் அப்படியே தான் சாப்பிட்டு வந்துள்ளோம் இன்று அதற்கு மாற்றாக அதில் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
நுங்கு - 500 கிராம்
கற்கண்டு - 300 கிராம்
பால் - 20 கிராம்
குங்குமப்பூ - 5 கிராம்
ஏலக்காய் பொடி - தேவையான
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
நெய் - 150 கிராம்
செய்முறை:
நுங்கை சீவி அதனுடைய தோலை நீக்கிவிட்டு நுங்கில் இருக்கும் நீருடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு மையாகும் வரை அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் கற்கண்டை சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும். கற்கண்டு நன்கு கரைந்த உடன் இதனுடன் நொங்கு அரைத்து வைத்திருந்த கலவையை சேர்த்து நன்கு கிளறிக் கொடுக்க வேண்டும்.
அல்வா பக்குவம் வரும் வரை நன்கு கலந்து கொடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி குங்கும பூவை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, உலர்திராட்சை சேர்த்து நன்கு சிவந்து வரும்படி பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நுங்கு கலவையில் நாம் கரைத்து வைத்திருந்த பால், குங்குமப்பூ பொறித்து வைத்திருந்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் பொடி நெய் ஊற்றி நன்கு கிளறிக்கொடுக்க வேண்டும். நுங்கை நாம் அப்படியேதான் சாப்பிட்டு வந்துள்ளோம்.
இன்று அதற்கு மாற்றாக அல்வா செய்து சாப்பிடும்போது அது ஒரு புதுவிதமான சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். இதற்கு எந்தவித புட் கலரும் தேவையில்லை குங்குமபூவின் கலரே போதுமானது. கமகமக்கும் ஒரு புது சுவையில் நுங்கு அல்வா தயார். கண்டிப்பாக அனைவரும் ட்ரை பண்ணி பாருங்க இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.