
முள்ளங்கி பொடிமாஸ்
தேவை:
முள்ளங்கி – 100 கிராம், வெங்காயம், வர மிளகாய் – தலா 1, பயத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, பயத்தம்பருப்பு, மஞ்சள்தூள், முள்ளங்கி சேர்த்து வதக்கி, வெந்ததும் நன்றாகக் கிளறி… தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
முள்ளங்கி சட்னி.
தேவை:
முள்ளங்கி - 100 கிராம், வெங்காயம் - ஒன்று,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
வர மிளகாய் - 8,
இஞ்சி - ஒரு துண்டு கறிவேப்பிலை - கைப்பிடி அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் முள்ளங்கி, இஞ்சி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியுடன் சேர்க்கவும். வித்தியாசமான சுவையில் முள்ளங்கி சட்னி தயார்.
முள்ளங்கி ராய்தா
தேவை:
முள்ளங்கி – ஒன்று,
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – ஒன்று, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, கெட்டித் தயிர் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். கெட்டித் தயிரைக் கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி – தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும். சுவையான முள்ளங்கி ராய்தா ரெடி.
முள்ளங்கி சப்பாத்தி
தேவை:
முள்ளங்கி – 1, கோதுமை மாவு – முக்கால் கப்,
சோயா மாவு – 2 டீஸ்பூன், மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். சுவையான முள்ளங்கி சப்பாத்தி ரெடி.