முட்டைக்கோஸை ஏனோ அதிகம் விரும்புவதில்வை. ஆனால் அதிலுள்ள நன்மைகள் அதிகம் தெரியுமா? ஆம்
முட்டைகோஸ் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலைத்தாக்கும் புற்றுநோய், இதயநோய் பாதிப்பை தடுக்கும். கலோரிகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ள இதை உண்பதால் செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. உடல் சூட்டை தணிககிறது. இதிலுள்ள புரதச்சத்து நலன் தரும்.
முட்டைக்கோஸ் பிரியாணி:
தேவை:
பாசுமதி அரிசி- 2 கப்
முட்டைகோஸ் - சிறியது ஒன்று
உரித்த பச்சை பட்டாணி - ஒரு கப்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி - 3
பச்சை மிளகாய்- இரண்டு
தேங்காய் பால் - 1 கப்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு -5 பற்கள்
தேங்காய் துருவல்- இரண்டு டீஸ்பூன் பட்டய லவங்கம் ஏலக்காய் - தலா 2
சோம்பு - சிறிது
கொத்தமல்லித்தழை புதினா - சிறிது
நெய் அல்லது எண்ணெய் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்கு கழுவி வடித்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸ், வெங்காயம், தக்காளிகளை பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியை வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவலை மிக்சியில் இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் அரைத்து 1 கப் பால் எடுக்கவும். குக்கரில் எண்ணெய் அல்லது நெய்விட்டு காய்ந்ததும் கடுகுடன் பட்டை, லவங்கம், சோம்பு,ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு முட்டைக்கோஸ் பட்டை பச்சை பட்டாணி தக்காளி தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தேங்காய் பால் மற்றும் இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி மேலே புதினா கொத்தமல்லி போட்டு குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுக்கவும். கோஸ் வெந்திருந்தாலும் அதன் சத்துக்கள் இறங்கிய பிரியாணி ரெடி.
கம்பு கார உருண்டை:
தேவை:
கம்பு மாவு - 1/2 கப்
கோதுமை மாவு அல்லது மைதா மாவு- 1/2 கப்
மிளகாய்த்தூள் - காரத்திற்கு ஏற்ப
துருவிய கேரட் அல்லது கோஸ் - கால் கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
சோடா உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் உப்பு - தேவைக்கு
செய்முறை:
கம்பு மாவுடன் சலித்த கோதுமை மாவு (அல்லது மைதா) பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய காய், சமையல் சோடா, சீரகம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு பொரித்து எடுக்கவும். முடிந்த அளவு கோதுமை மாவு உபயோகிக்கவும். இது சத்துள்ள கார உருண்டையாக சாப்பிட சுவையானது.