
பஜ்ஜி உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவுடன் சோடா உப்பு சேர்ப்பார்கள். அதற்கு பதிலாக மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து சுட்டுப் பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
இட்லி மாவில் சிறிது தேங்காய் எண்ணையில் வதக்கிய தேங்காய்த் துருவலைக் கலந்து வேக வைத்தால் மணமான தேங்காய் இட்லி தயார்.
சமையல் எண்ணெயை சூடாக்கும்போது, வெற்றிலை அல்லது கொய்யா இலையைப் போட்டால் கசடு நீங்கிவிடும்.
பிரட்டுக்கு நடுவில் பனீர் துண்டு வைத்து தோசைக்கல்லில் நெய் விட்டுப் புரட்டி எடுத்தால் சுவையாக இருக்கும்.
துவரம் பருப்பில் சரியான அளவில் நீர் சேர்க்காவிட்டால் வேக நீண்ட நேரம் எடுக்கும். அதிகத் தண்ணீர், குறைவான தண்ணீர் இரண்டுமே சரிப்பட்டு வராது. துவரம் பருப்பு வெண்ணை போல குழைந்து வருவதற்கு கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் சேர்த்தால் போதும்.
காய்கறி சாலட் செய்யும்போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்துச் சேர்த்துக்கொள்ளுங்கள். சத்துக்கு சத்து, சுவைக்கு சுவை.
கேசரி செய்யும்போது தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொண்டு, பால் சேர்த்துக்கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
பூரி செய்ய தயாரிக்கும் மாவைஉடனே பயன்படுத்த வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெய் குடிக்கும்.
வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றோடோன்று ஒட்டிக் கொண்டிருக்கும். இதைத் தவிர்க்கவும் உதிரியாக சமைப்பதற்கும் சிறிதளவு தயிரை சேர்த்துக் கொண்டால் போதும்.
சப்பாத்தக்கு மாவு பிசையும்போது சிறிது பாலை ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.
வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.
கீரை சமைத்த பின் பசுமையாகவும், ருசியாகவும் இருக்க வேண்டுமென்றால், கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணையை அதனுடன் சேர்த்தால் போதும்.
மசால் வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகம் போல் தோன்றினால் சிறிது பொட்டுக்கடலையை கரகரவென்று பொடி செய்து மாவில் கலக்கினால் மாவு இறுகிவிடும்.
எந்த விதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்துப் பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும் நல்ல ருசியாகவும் இருக்கும்.
இட்லி ஊற்றும்போது கரண்டியை மாவில் விட்டு அடிவரை கலக்காமல், மேலாக லேசாகக் கலக்கி ஊற்ற இட்லி மிருதுவாக வரும்.
சமையலுக்கு வாங்கிய வெண்டைக்காய் முற்றி விடாமல் இருக்க காயின் மேல் பகுதி, அடிப்பகுதியை சிறிதளவு நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.