
தலைப்பை படிக்கும்பொழுதே சத்துக்கள் ஏராளம். ருசியோ தாராளம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா! அதன் செய்முறை பற்றி இதோ:
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு
செய்ய தேவையான பொருட்கள்:
டெசிகேட்டட் கோகனட் -ஒரு டம்ளர்
வெல்லம்- 150 கிராம்
உடைத்த பாதாம்-5 டேபிள்ஸ்பூன்
உடைத்த முந்திரி -5 டேபிள் ஸ்பூன்
அத்திப்பழம்- 5 டேபிள் ஸ்பூன்
விதை நீக்கி நன்றாக நறுக்கிய பேரீச்சைப் பழம் - ஒரு பெரிய டம்ளர்
ஏலப்பொடி -அரை டீஸ்பூன்
நெய்- அரை டம்ளர்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெல்லத்துருவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். பேரிச்சை பழத்தில் ஒரு கைப்பிடி அளவும், அத்திப்பழத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவும் எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இப்படி செய்து வைத்தால் லட்டு பிடிக்கும் பொழுது கரடு முரடாக இல்லாமல் பிடிக்க வரும்.
இவற்றுடன் மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் வெல்லப்பாகில் சேர்த்து நெய் ஊற்றி கிளறி கலவை ஒன்றாக கூடி வரும் பொழுது இறக்கி வைக்கவும். ஆறிய பின்னர் பிடித்தமான அளவுக்கு அழகாக லட்டு பிடித்து வைக்கவும். இரும்புச்சத்தில் இருந்து எல்லாவிதமான சத்துக்களையும் அள்ளித்தரும் ஆரோக்கியமான லட்டு இது. செய்து அசத்துங்க.
ராகி- திணை இனிப்பு சீடை
செய்ய தேவையான பொருட்கள்:
ராகி மற்றும் திணை மாவு தலா -ஒரு கப்
வெல்லத் துருவல் -ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
வறுத்த உளுத்த மாவு- கால் கப்
ஏலப்பொடி- ஒரு டீஸ்பூன்
சுக்குப் பொடி -ஒரு டீஸ்பூன்
வெள்ளை எள் -ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு- தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத் துருவலில் 100 மில்லி அளவுக்கு தண்ணீர் சேர்த்து பாகு வைக்கவும். பாகு கம்பி பதம் வரும்போது மேற்கூறிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவுக்கு கலவை திடமாக வந்தவுடன் உருண்டை பிடித்து, கொதிக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வித்தியாசமான ருசியுடன் அனைவரையும் விரும்ப வைக்கும் சீடை இது. இரும்புச்சத்து , கால்சியம் சத்து, நார்ச்சத்து என்று ஏராளமான சத்துக்களை வாரி வழங்கும் வள்ளல் இது.