லட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் சத்தான லட்டு செய்து தந்தால். இதோ சத்துகள் மிகுந்த ஆளி விதை மற்றும் கேரட்டில் லட்டுக்கள் செய்யலாமா?
ஆளிவிதையில (Flax seed) நார்சத்து அதிகம். இதை சரியான அளவில எடுக்கும்போது பசி உணர்வைக் கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பு சேர்வதை தடுத்து, இதயநோய், பக்கவாதம் போன்றவை வராமல் பாதுகாக்கும். மேலும் இதில் உள்ள 'லிக்னன்ஸ்’ (Lignans) எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல்களின் செயல்பாட்டை அதிகமாக்கி, தேவையில்லாத கொழுப்பை எரித்து நலன் தருகிறது. அடுத்து கேரட். இதை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை மேம்படுத்துகிறது. உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் கேரட்டை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆளிவிதை லட்டு
தேவை;
ஆளி விதை - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
பாதாம் - 50 கிராம்
சுத்தமான வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 1/4 கப் அல்லது இனிப்பு சுவைக்கேற்ப
நெய் கால் கப்
செய்முறை;
அடி கனமான வெறும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஆளி விதையையும் பொட்டுக்கடலையும் போட்டு மிதமான தீயில் லேசாக நிறம் மாறி வாசனை வரும் வரை வறுக்கவும். பின் அதை ஆறவிட்டு ஒன்றாக இரண்டையும் சேர்த்து மிக்சியில் பொடிக்கவும். இந்தப் பொடியுடன் துருவிய வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை, ஏலக்காய்த்தூள், பொடித்த பாதாம், நெய் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு கலந்துவிட்டு கைகளால் அழுத்தி உருண்டை பிடிக்கலாம். கை சூட்டிலேயே லட்டு பிடிக்க வரும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது நெய் சேர்க்கலாம். தேவைப்படும் அளவில் உருண்டைகளாக உருட்டி காற்று புகாத டப்பாவில் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
கேரட் தேங்காய் லட்டு
தேவை:
புதிய கேரட் துருவல் - இரண்டு கப் வெண்ணெய் அல்லது நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு
கப்
பாதாம் - 8 அல்லது 10
உலர்ந்த தேங்காய் துருவல் - ஒரு கப் ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை;
ஒரு கடாயில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் சீவிய பாதாமை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் கேரட் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கி அதனுடன் முக்கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சில நிமிடங்கள் வேகவிட்டு கலவை கெட்டியாக சுருண்டு வரும்போது ரோஸ் எசன்ஸ், வறுத்த பாதாம் சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைக்கவும். கை பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும் கையில் எண்ணெய் அல்லது நெய் தடவிக்கொண்டு கலவையை உருண்டைகளாக்கி மீதமுள்ள தேங்காய்த் துருவலில் புரட்டி லட்டுக்களாக காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். இனிப்பு அதிகம் தேவைப் பட்டால் மட்டும் சிறிது சர்க்கரை சேர்க்கலாம்.