

பட்டாணி தோசை
தேவையான பொருட்கள்:
உலர் பட்டாணி – 250 கிராம்
பாசிப்பயறு – 150 கிராம்
கருப்பு உளுந்து – 100 கிராம்
வெள்ளை உளுந்து – 150 கிராம்
பச்சரிசி – 250 கிராம்
பச்சை மிளகாய் – 10 (அல்லது உங்கள் அளவுக்கு)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புதினா – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
பட்டாணி மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை தனித்தனியாக 8 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்தும், அரிசியும் ஒன்றாக ஊறவைக்கவும்.
கிரைண்டரில் முதலில் பட்டாணி, மிளகு, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். பின்னர் பாசிப்பயறு, அரிசி, உளுந்து கலவையைச் சேர்த்து நன்கு மையமாக அரைக்கவும்.
தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலந்து, புளிக்க வைக்கவும். புளித்த மாவில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய்விட்டு சுடவும். இந்த பச்சை வண்ண தோசை, தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பட்டாணி மசாலா கட்லெட்
தேவையான பொருட்கள்:
ஊறவைத்த பட்டாணி – 2 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
வறுத்து பொடித்த மிளகு + சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
அரிசி மாவு – 1 கப்
தயிர் – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
துருவிய கேரட் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஊறவைத்த பட்டாணியை பிரெஷர் குக்கரில் வேகவைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதில் வறுத்து பொடித்த மிளகு–சீரகப்பொடி மற்றும் வேக வைத்த பட்டாணியைச் சேர்க்கவும். நன்கு கிளறி, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, உருளைக் கிழங்கை மசித்து அதனுடன் சேர்த்துக்கிளறி இறக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பட்டாணி மசாலாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி, மாவு கலவையில் தோய்த்து எடுத்து வைக்கவும்.
பின்னர் அதனை தோசைக்கல்லில் போட்டு நன்கு முறுகலாக சுட்டு எடுத்து, துருவிய கேரட் தூவி பரிமாறவும்.