விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்குப் பிடித்த கொழுக்கட்டைக்கு அடுத்தபடியாக வைப்பது சுண்டல்தான். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு விதவிதமான சுண்டல்கள் செய்யலாம் வாருங்கள்.
விநாயகர் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை, சுண்டல், வடை, பாயசம் போன்றவற்றை பக்தி சிரத்தையுடன் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். சத்துக்கள் நிறைந்த சுண்டல் வகைகளை இப்பதிவில் பார்க்கலாம்.
கொண்டைக்கடலை மூலிகை சுண்டல்:
முளைகட்டிய கொண்டைக்கடலை
வெள்ளை (அ) கருப்பு. 1 கப் புதினா கைப்பிடி அளவு
துளசி பத்து இலைகள்
வெற்றிலை 2
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் கால் கப்
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, நல்லெண்ணெய் சிறிது இஞ்சி புதினா துளசி காம்புகள் நீக்கிய வெற்றிலை பச்சை மிளகாய் தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக சுற்றி எடுக்கவும் முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை ஊறவைத்து முளைகட்டவும்.
காலையில் முளைகட்டிய கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயத்தை நல்லெண்ணையில் தாளித்து வெந்த கொண்டை கடலையை சேர்த்து கிளறவும் கடைசியாக கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து கிளற புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான சுண்டல் தயார்.
பயறு சுண்டல்:
பச்சைப்பயிறு ஒரு கப்
பச்சை மிளகாய் 2
தேங்காய்த் துருவல் 1/4 கப்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம்
பச்சைப்பயிறை இரண்டு முறை அலசி 2 மணி நேரம் ஊறவிட்டு நீரை வடிகட்டி முளை கட்டவும். முளை கட்டினால் புரதச்சத்து கூடும். விருப்பம் இல்லை எனில் அப்படியே கூட ஊறவைத்து வேகவிட்டு சுண்டல் செய்யலாம். உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக விடவும். அடுப்பில் அதிக நேரம் வைக்க வேண்டாம் குழைந்து விடும்.
தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் கடுகு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு, சீரகம் 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை சேர்த்து நல்லெண்ணையில் தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் வெந்த பயறை சேர்த்து கிளறி அத்துடன் அரைத்த தேங்காய் மசாலாவை போட்டு கலந்து இறக்கவும். சத்தான ருசியான சுண்டல் தயார்.
பச்சை பயறிலேயே உப்பிற்கு பதில் வெல்லம், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து இனிப்பு சுண்டல் செய்யலாம். ருசியாக இருக்கும்.
காராமணி இனிப்பு சுண்டல்:
சிகப்பு காராமணி 200 கிராம்
வெல்லம் 150 கிராம்
நெய் 2 ஸ்பூன்
ஏலக்காய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
காராமணியை நான்கு மணிநேரம் ஊறவிடவும். பிறகு குட்டி குக்கரில் 2 சிமிட்டு உப்பு சேர்த்து தேவையான நீர்விட்டு ரெண்டு விசில் விடவும்.
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதில் ஏலக்காயை பொடித்து சேர்த்து வெந்த காராமணியையும் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். நன்கு சுருண்டு வரும் சமயம் தேங்காய்த் துருவல் தூவி இறக்க மிகவும் ருசியான காராமணி இனிப்பு சுண்டல் தயார். செய்வதும் எளிது சத்தும் நிறைந்தது இந்த சுண்டல் வகைகள்.