நாம் கேட்டதையெல்லாம் கொடுக்கப் போகும் அட்சய பாத்திரம் நமது மனதுதான். அற்புத விளக்கும் அதுவேதான். அதிசய பூதமும் நம் மனமேதான். பறக்கும் கம்பளமும் மந்திர கோலும் பொன்னும் மணியும் பூட்டி வைத்திருக்கும் குகையும் இவை எல்லாமே நம் மனம்தான்.
நம் மனது வைத்தால் அள்ள அள்ள குறையாமல் அதிலிருந்து நமக்கு வேண்டியதெல்லாம் வரும். அதை தேய்த்தால் நம் விருப்பம் என்னவென்று கேட்கும். நம் ஆணையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கும். அதன் சக்தியால் நாம் எங்கும் பறக்கலாம் .அதை பார்த்து கையை அசைத்தால் நாம் விரும்பும் எதையும் கட்டி முடிக்கலாம். உலகின் அத்தனை செல்வங்களையும் வாரிக்குவிக்கலாம்.
ஒவ்வொன்றும் தனித்தனியாக என்று இல்லாமல் எல்லாமே ஒன்றாய், ஒன்றே எல்லாமாய் நம்மிடத்தில் மனம் இருக்கிறது. நம் ஒவ்வொருவரிடமும் அது இருக்கிறது. ஆனால் அது இன்னும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது அவ்வளவுதான்.
இனிமேல் அது பயன்படுத்தப்பட போகிறது. அது உங்களுக்கு கைகட்டி சேவகம் புரியப்போகிறது. இவன் எங்கே உருப்படப் போகிறான் என்று நம் தலையில் குட்டியவர்களை நாம் மறக்கத் தயாராக இல்லை. இதுவரை தெரியாமல் இருந்ததை கற்றுக்கொள்ள போகிறோம். இவள் அப்படி ஒன்றும் புத்திசாலி இல்லை என்று சொன்னவர்களை அவர்கள் சொன்னது தவறு என்று உணர வைக்க போகிறோம்.
பாத்திரம், விளக்கு, பூதம் கம்பளி கோல், குகை எல்லாமே நம்மிடம் இருக்கிறது. இதை வைத்து தன்னம்பிக்கையை உருவாக்கி நம் மனதில் அடைய விரும்பிய குறிக்கோள் நோக்கிய பாதையில் பயணிக்க போகிறோம். பயணத்தின் முடிவில் நாம் அடைய வேண்டிய வெற்றி இலக்கை கண்டிப்பாக அடைந்தே தீருவோம்.