
இந்த சதாப்தத்தின் ஆரோக்கியமான உணவுகளில் ஓட்ஸ் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. அதே நேரம் இதை பயன்படுத்தி பலவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஓட்ஸ் பயன்படுத்தி ஊத்தப்பம் செய்வது எப்படி? எனத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
இந்த ஓட்ஸ் ஊத்தப்பம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். குழந்தைகள் பெரும்பாலும் காய்கறிகளை அப்படியே கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு பிடித்தது போல வேறு விதமாக செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்போர்ட்ஸ் ஊத்தப்பட்டில் காய்கறிகளையும் சேர்த்து நாம் செய்யும்போது அது மிகவும் ஸ்பெஷலான நார்ச்சத்து நிறைந்த உணவாக மாறுகிறது. எனவே குழந்தைகள் முதல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இது இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 2 கப்
கடலை மாவு - ½ கப்
தயிர் - 2 கப்
ரவை - ½ க்ப
குடைமிளகாய் - ¼ கப்
முட்டைகோஸ் - ¼ கப்
தேங்காய் துருவல் - ¼ கப்
கேரட் - ¼ கப்
சீரகம், மிளகு, முந்திரிப் பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் ரவை மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே போல கடலை மாவை கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸ், குடைமிளகாய், கேரட் போன்றவற்றை சிறிதாக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
ரவை, ஓட்ஸ் கலவை மற்றும் கடலை மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய காய்கறி, தேங்காய் துருவல், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதிலேயே மிளகு, சீரகம், முந்திரி பருப்பு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்துவிட்டு, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு அந்த கலவையை கலந்ததும், தோசை கல்லில் ஊற்றி ஊத்தப்பம் போல வேகவைத்து எடுத்தால், மிகவும் ஆரோக்கியமான ஓட்ஸ் ஊத்தப்பம் தயார்.