கோதுமை ராகி போன்று ஒட்ஸ் தானியமும் உடல் நலத்துக்கு உகந்ததாக உள்ளது. ஓட்ஸில் அதிக நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் உணவு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை காலை உணவில் உட்கொள்வதால் உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை குறைக்க முடியும்.
மேலும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஓட்ஸில் உள்ள நார்ச்சத்தில் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. அத்துடன் இரத்தச் சர்க்கரை அளவை சீராக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மனஅழுத்தத்தை அண்ட விடாது. நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் என்கிறது குறிப்புகள்.
இத்தனை நன்மைகள் உள்ள ஓட்ஸில் சூப்பரான வெஜ் சூப்பும் இட்லியும் செய்யலாம் வாங்க.
ஓட்ஸ் வெஜ் சூப்:
தேவை:
ஓட்ஸ் - 1 சிறிய கப்
தக்காளி- 4
பீட்ரூட் கேரட் பீன்ஸ் - 1 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 1
பட்டை கிராம்பு - தலா 2
மிளகுத்தூள் - தேவைக்கு
பூண்டு- 5 பல்
மிளகு, சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை வேகவைத்து தோல் உரிக்கவும். சூடான வெறும் வாணலியில் ஓட்ஸைப் போட்டு லேசாக வறுத்து ஆறியதும் மிக்சியிலிட்டு பொடிக்கவும். நறுக்கிய கேரட் பீட்ரூட் பீன்ஸ் வெங்காயம் குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் என்னை விட்டு பட்டை கிராம்பு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி கேரட் பீட்ரூட் பீன்ஸ் சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நான்கு விசில் விட்டு விசில் அடங்கியதும், வெந்த காய்கறிகளை வடிகட்டி மசித்து அதனுடன் வறுத்துப் பொடித்த ஓட்ஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பின் இதில் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் நறுக்கிய கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும்.
ஓட்ஸ் இட்லி:
தேவை:
ஓட்ஸ் பவுடர் - 2 கப்
உளுத்த மாவு - 1/4 கப்
புளித்த மோர் - 1/2 கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு கல்லப்பருப்பு- 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி -சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பவுலில் ஓட்ஸ் பவுடர் உளுந்த மாவு இரண்டையும் நன்றாக சலித்துக்கொண்டு புளித்த மோர் உப்பு சேர்த்து சற்று கெட்டியாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும் இந்த மாவை இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.