
கேரளத்தில் வசித்தபொழுது, என் பக்கத்து வீட்டு தோழி இரண்டு விதமான ரெசிபிகளை கொடுத்து அசத்தினார். ஒன்று அடை பிரதமனில் பலாப்பழம் வாசனை உடன் கூடிய பாயாசம்.
2.வாழை இலை துவையல் இது ரெண்டும் வாழ்க்கையில் மறக்க முடியாது. இவற்றை அவர் செய்த பொழுது பக்கத்தில் இருந்து பார்த்து, அந்த அடை பிரதமனில் கலந்து செய்த சக்க வரட்டியை பால் கொழுக்கட்டையில் செய்து ருசித்துவிட்டு, பிறகு செய்ய கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகிறேன்.
சக்க வரட்டி
செய்ய தேவையான பொருட்கள்:
நன்கு கனிந்து கொட்டை நீக்கிய பலாச்சுளைகள் -ஒரு கிலோ
வெல்லத்துருவல்- முக்கால் கிலோ
நெய்- கால் கிலோ
செய்முறை:
பலாச்சுளைகளை குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் நேரத்துக்கு வேகவைத்து ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
ஒரு அடிகனமான வாயகன்ற பாத்திரத்தில் வெல்லத்துருவலை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பாகுபதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் அரைத்து வைத்த பலாச்சுளை விழுதை அந்த வெல்லப் பாகில் போட்டு நன்கு கிளறி அவ்வப்பொழுது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி, கலவை நன்றாக உருண்டு திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் ஓரங்களில் நெய் பிரிந்து பளளவென்று வரும் பொழுது மேலே கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கி ஆறவைத்து காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்துவிட்டால் தேவையான பதார்த்தங்களுக்கு அவ்வப்பொழுது எடுத்து வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அடை பிரதமன் செய்த என் தோழி சக்க வரட்டியில் சிறிதளவு சேர்த்து கலந்து செய்து கொடுத்ததுதான் ருசிப்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவும், ருசியாகவும், நம்மை கற்றுக் கொள்ளவும் வைத்தது. இந்த பலாப்பழ சீசனில் சக்க வரட்டியை செய்து வைத்துக்கொண்டு நாமும் விதவிதமாக பலகாரங்கள் செய்து அசத்தலாம்.
வாழை இலை துவையல்
செய்ய தேவையான பொருட்கள்:
இளசானா வாழை இலை- சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கியது அரையிலை
கடலைப்பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- எட்டு
உரித்த பூண்டு- பத்து பற்கள்
தோல் உரித்த சின்ன வெங்காயம்- 20 -25
புளி- நெல்லிக்காய் அளவு
இஞ்சி- சிறு துண்டு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பை நன்கு வறுத்துக்கொள்ளவும். இவை பொன்னிறமாக வதங்கியதும் வரமிளகாய், பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும், சிறு துண்டங்களாக அரிந்து வைத்திருக்கும் வாழையிலையைச் சேர்த்து சுருள வதக்கி புளியையும் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
இவற்றினை நன்றாக ஆறவிட்டு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்த்து விடவும். இட்லி, தோசை இடியாப்பம், சாதத்துடன் பரிமாறவும்.