
சாயங்கால உணவாக, மும்பை ஸ்டைல் பன்னீர் ஃபிராங்கி செய்யலாமா? இது ஒரு சுவையான இந்தியன் தெருக்கடை உணவாகும். இதை, ஒரு மிருதுவான சப்பாத்தி மீது ஸ்பைஸஸ் சேர்த்த பன்னீர் மற்றும் காய்கறிகள் சேர்த்து தயாரிக்கலாம். இது ஒரு எளிதில் தயாரிக்கக் கூடிய, அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.
மும்பை ஸ்டைல் பன்னீர் ஃபிராங்கி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.சிறு சதுரமாக நறுக்கிய பன்னீர் 200 கிராம்
2.நறுக்கிய வெங்காயம் 1
3.நறுக்கிய குடை மிளகாய் 1
4.நறுக்கிய தக்காளி 2
5.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன்
6.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
7.சீரகம் ½ டீஸ்பூன்
8.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
9.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
10.கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்
11.சாட் மசாலா தூள் 1 டீஸ்பூன்
12.உப்பு தேவையான அளவு
13.மிருதுவான சப்பாத்தி 4
14.பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
15.கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்த சட்னி, மற்றும் இனிப்பு சட்னி தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போடவும். அது சிவந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறு தீயில் வைத்து வதக்கவும். பின் அதனுடன் வெங்காயம், குடை மிளகாய் மற்றும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து கிளறவும். பிறகு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் சாட் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பின் அடுப்பிலிருந்து இறக்கவும். மற்றொரு கடாயில் பட்டர் சேர்த்து அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறம் வரும்வரை பொரித்தெடுக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் கொத்தமல்லி சட்னியை முழுக்க தடவவும். அதில் பொரித்த பன்னீர் துண்டுகளை வைத்து, அதன் மீது காய்கறி கலவையை தாராளமாகப் பரத்தவும். பின் சப்பாத்தியை மிக கவனத்துடன் ரோலாக சுருட்டவும். டைட்டாக சுருட்டி எடுத்த சப்பாத்தியை, கடாயில் பட்டர் தடவி கிரிஸ்ப்பியாக சுட்டு எடுக்கவும்.
மும்பை ஸ்டைல் பன்னீர் ஃபிராங்கி ரெடி. சுடச் சுட, இனிப்புச் சட்னியுடன் பரிமாறவும். அதன் சுவைக்கு இணையே கிடையாது. வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி உண்பர்!