இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இந்த பனீர் ரோல். இது சுவையாக இருப்பதுடன் ஆரோக்கியமானதும் கூட. இதை தயாரிப்பது மிகவும் எளிது. பனீர் ரோல் என்பது ஒரு சிறந்த சிற்றுண்டி வகை உணவு. இதில் பனீர், காய்கறிகள், மசாலா பொருட்கள் மற்றும் சப்பாத்தி போன்றவை முக்கிய பொருட்களாக இருக்கும். பனீர் ரோலில் நீங்கள் விரும்பும் காய்கறிகள் மசாலா பொருட்களை சேர்த்து உங்கள் சுவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
பனீர் ரோல் செய்யத் தேவையான பொருட்கள்:
பனீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
முட்டைக்கோஸ் - 1/4
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
புதினா இலை - ஒரு கைப்பிடி
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கசூரி மீதா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வறுக்க போதுமான அளவு
சப்பாத்தி அல்லது பரோட்டா - தேவையான அளவு
பனீர் ரோல் செய்யும்முறை:
முதலில் பனீரை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா இலைகளையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பனீரை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்னர், கேரட், முட்டைகோஸ் சேர்த்து வதக்குங்கள்.
வதக்கிய காய்கறிகளில் மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகம், கசூரி மேத்தி சேர்த்து நன்றாகக் கிளறவும். வதக்கிய காய்கறிகளில் வறுத்து வைத்த பனீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக ஒரு சப்பாத்தியில் வதக்கிய பனீர் கலவை வைத்து பக்கவாட்டில் மடித்து உருட்டினால், பனீர் ரோல் தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இத்துடன் தக்காளிச் சட்னி அல்லது புதினா சட்னி சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ரெசிபியை மாற்றிக் கொள்ளலாம். பனீருக்கு பதிலாக வேறு ஏதேனும் பொருட்களை சேர்த்து தயாரித்தால், அதற்கு ஏற்றவாறான சுவையைக் கொடுக்கும்.