இந்தியர்களிடமிருந்து பிரிக்க முடியாத உணவு வகைகளில் பானிபூரியும் ஒன்றாகும். ‘எல்லோரையும் கவரும் அளவிற்கு அப்படி என்னதான் அதில் இருக்கிறது’ என்று ஆச்சர்யப்படுத்தும் ஒரு தீனி வகையாகும்.
சாட் உணவு வகைகள் வட இந்தியாவிலிருக்கும் உத்திரபிரதேசத்திலிருந்தே தோன்றியது என்று கூறப்படுகிறது. பானிபூரி இந்தியா முழுக்க பரவியதன் காரணம் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்ததாலேயாகும். ‘பானிபூரி’ என்ற வார்த்தையை மார்ச் 2005ல் ஆக்ஸ்போர்ட் ஆங்கில டிக்ஷ்னரியில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அப்படிப்பட்ட பானிபூரியைதான் நாம் இன்று வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்ய போகிறோம். எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.
பானிபூரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை-1 கப்
மைதா மாவு-2 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி.
புளிப்பு சட்னி செய்வதற்கு,
புளி-10
பேரிச்சம்பழம்-6
வெல்லம்-1/4கப்
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
புதினா தண்ணீர் செய்வதற்கு,
மல்லி இலை-1/2 கப்
புதினா-1/2 கப்
பச்சை மிளகாய்-3
மிளகு-1/4தேக்கரண்டி
சீரகத்தூள்-1 தேக்கரண்டி
இஞ்சி-ஒரு துண்டு
எழுமிச்சை சாறு- பாதி
உப்பு- தேவையான அளவு
பூரி மசாலா செய்வதற்கு,
உருளைகிழங்கு-2
கொண்டக்கடலை-1/2 கப்
மிளகாய் தூள்-1/2 தேக்கரண்டி
சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி
சின்னதாக வெட்டிய வெங்காயம்- ½கப்
மல்லி இலை- சிறிதளவு
உப்பு- ½ தேக்கரண்டி.
பானிபூரி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலை எடுத்து அதில் 1கப் ரவை, 2 தேக்கரண்டி மைதா மாவு, 1/2 தேக்கரண்டி உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மாவை பிசைந்து வைத்துக்கொள்ளவும். இப்போ ஒரு துணியில் லேசாக தண்ணீரில் நனைத்து மாவின் மீது போட்டு வைத்து 30 நிமிடம் நேரம் ஊற வைக்கவும்.
புளிப்பு சட்னிக்கு 10 புளியை தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் அந்த புளியை நன்றாக வடிக்கட்டி தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் பேரிச்சம்பழம் 6 வெட்டி வைத்தது, ¼ கப் வெல்லம், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஒரு 5 நிமிடம் கழித்து சற்று கெட்டியானதும் மிக்ஸியில் மாற்றி அரைத்துவிடவும். அவ்வளவு தான் புளிப்பு சட்னி தயார்.
புதினா தண்ணீர் செய்ய மிக்ஸியில் 1/2கப் மல்லி இலை, ½ கப் புதினா இலை, 3 பச்சை மிளகாய்,1/4 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, ஒரு துண்டு இஞ்சி, எழுமிச்சை பழம் பாதி பிழிந்து விட்டு கொள்ளவும். கடைசியா தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதன் பின் கொஞ்சம் அதில் தண்ணீர் சேர்க்கவும். இப்போது புதினா தண்ணீர் தயார்.
இப்போது ஊறவைத்த மாவை நன்றாக பரப்பி விட்டு அதில் ஒரு அச்சு வைத்து சிறு சிறு வட்டமாக மாவை கட் செய்து எடுத்துக்கொள்ளவும். எண்ணையை நன்றாக காயவைத்து அதில் சின்னதாக கட் செய்து எடுத்த பூரியை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது உள்ளே வைக்க கூடிய மசாலாவை செய்யலாம். பவுலில் வேகவைத்த 2 உருளைகிழங்கை நன்றாக மசித்து விடவும், அதனுடன் வேகவைத்த கொண்டை கடலை ½ கப், ½ தேக்கரண்டி சீரகத்தூள், ½ தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி உப்பு சேர்க்கவும், வெங்காயம் 1/2கப், மல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது பானி பூரி ஒன்றை எடுத்து நடுவிலே சிறிதாக உடைத்துவிட்டு அதில் செய்து வைத்திருக்கும் மசாலா, புளி சட்னி பிறகு புதினா தண்ணீரில் முக்கி எடுத்து சாப்பிடவும். இது தான் பானிபூரி சாப்பிடும் முறையாகும். இப்போது சுவையான பானிபூரி தயார்.