நம் வாழ்க்கையில் தினமும் இரண்டு வகையான மக்களை நாம் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். ஒன்று நிரந்தரமற்ற மக்கள், இன்னொன்று நம் அன்றாட வாழ்வில் நம்முடன் பயணிப்போர் ஆவர்.
நிரந்தரமற்ற மக்களென்றால், அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாம் போகும் வழியில் பார்க்கக் கூடியவர்கள். நம் வாழ்க்கையில் பயணிக்கும் மக்கள் என்றால், நம்முடன் வேலை செய்பவர்கள், நம்மைப் பற்றி சிறிது அறிந்தவர்களாவர்.
நிரந்தரமற்ற மக்களை நாம் பார்க்கும்போது, அவர்களைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாது, நம்மைப் பற்றி அவர்களுக்கும் ஏதும் தெரியாது. இவர்களை நாம் போகிறபோக்கில் சந்தித்துக் கொள்வோம். அந்த சில நிமிடங்களிலேயே நம்முடைய உடை, அழகு, உருவம் என்று எல்லாவற்றையும் கவனிப்பது மட்டுமில்லாமல், அதைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிப்பார்கள். கேலி, கிண்டலெல்லாம் சில விநாடிகளில் அரங்கேறிவிடும். எனினும், அந்த நாளின் முடிவில் அவர்களின் முகம் நமக்கும் நம்முடைய முகம் அவர்களுக்கும் நினைவுக்கு வரப் போவதில்லை. இவர்களுக்காக நேரம் செலவழித்து நாம் கவலைப்பட வேண்டுமா என்று கேட்டால், இல்லை.
இன்னொரு விதமான மக்கள், நம் அன்றாட வாழ்க்கையில் நம்முடன் தொடர்புடையவர்கள். இவர்களுக்கு நம்மைப் பற்றிய சில விஷயங்கள் தெரியலாம். அதை வைத்து நம்மைப் பற்றி புறம் பேசுவது, கேலி, கிண்டல் செய்வதென்று இருக்கலாம். இவர்கள் நம்முடன் வேலை செய்பவர்களாக இருக்கலாம். இவர்களை போன்ற மக்களை நம்மால் எளிதில் கடந்துவிட முடியாதுதான். அவர்களை நாம் தினமும் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
எனினும், இவர்கள் உங்களின் குறைகளை மட்டுமே பேசினாலும், அதை தீர்ப்பதற்கான வழிகளை ஆராயப்போகிறார்களா? அல்லது அதை தீர்க்க முயற்சி எடுக்கப்போகிறார்களா? இவர்களால் முடிந்ததெல்லாம் குறை பேசுவது மட்டும்தான்.
சில சமயங்களில் நம் வாழ்க்கையில் எந்த எதிர்வினையும் செய்யாமல் இருப்பதே நாம் மற்றவர்களுக்கு சொல்லும் அருமையான செய்தியாகும். அதைப் புரிந்து கொண்டு இதுபோன்றவர்கள் தானாகவே நம்மைவிட்டு விலகிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த நாளின் இறுதியில், யாரும் யாரைப் பற்றியும் பெரிதாக நினைவில் வைத்துக்கொள்ள போவதில்லை. அவரவர் அன்றாட வாழ்க்கையில் மூழ்கிவிடுவோம். அதுவே நிதர்சனமாகும்.
இப்படிப்பட்ட மக்களை எண்ணி நாம் வருத்தப்பட வேண்டுமா? நம்மைப் பற்றி அவர்களிடம் விளக்க வேண்டுமா? என்று கேட்டால் இல்லை என்றே கூற வேண்டும்.
நாம் சிலருக்கு நல்லவராகத் தோன்றுவோம். இன்னும் சிலருக்கு கெட்டவராகத் தெரிவோம். நாம் இளகிய மனம் படைத்தவர்கள் என்று சிலர் நினைக்கலாம். ‘அவள் சரியான கல் நெஞ்சக்காரி’ என்று சிலர் நம்மைத் திட்டலாம். நாம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான பிம்பத்தில் இருக்கிறோம். இதில் யாரிடம் நம்மைப் பற்றி விளக்கிச் சொல்வது, யாரிடம் வேண்டாம் என்று ஒதுங்கி விடுவது? நம்மைப் பற்றி எல்லோரிடமும் முழுமையாக விளக்கி முடிக்க நம் வாழ்நாளே போதாதல்லவா?
மற்றவர்கள் நம்மைப் பற்றி புரிந்துகொள்வது நம்முடைய தவறில்லை. அதை விளக்க வேண்டிய பொறுப்பும் நமக்கில்லை. இப்படிப்பட்ட மக்களை வாழ்க்கையில் தவிர்த்துப் பாருங்கள், வாழ்க்கை சும்மா ஜம்முன்னு இருக்கும்.