
மரவள்ளிக்கிழங்கு காரப் பணியாரம்
தேவை:
மரவள்ளிக் கிழங்கு துருவல் – 3 கப்,
தோசை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், வற மிளகாய் – 8,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
தேங்காய் துருவலுடன் வற மிளகாய், சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக் கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை ‘சிம்’மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு காரப் பணியாரம் தயார்.
பனம் பழ இனிப்பு பணியாரம்
தேவை:
பனம் பழம்- 4
மைதா - அரைகிலோ
சர்க்கரை - அரை கிலோ
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை;
பின் நன்கு பழுத்த பனம் பழத்தை எடுத்து, அதன் மேல் தோலை உரித்து, நன்கு பிசைந்து களி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை வெள்ளை துணியில் ஊற்றி பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் பனம் பழக்களியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவேண்டும். காய்ச்சிய பின் அதனுள் மைதா மாவு, சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்துவடைக்கு மாவு தயார் செய்யும் பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்த பின், மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான பனங்காய் இனிப்பு பணியாரம் தயார்.