
கொத்தவரங்காய் பொடிமாஸ்
தேவை:
கொத்தவரங்காய் – கால் கிலோ,
வெங்காயம் – 1, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
அரைக்க:
தேங்காய் துருவல் – அரை கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 5, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.
செய்முறை:
கொத்தவரங்காயைப் பொடியாக நறுக்கி உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு வதக்கவும். இதில் வெந்த கொத்தவரங்காயைப் போட்டுக் கிளறி, அரைத்த விழுதை சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடம் கிளறி இறக்கவும். வித்தியாசமான கொத்தவரங்காய் பொடிமாஸ் தயார்.
கருணைக்கிழங்கு பொடிமாஸ்
தேவை:
கருணைக்கிழங்கு – கால் கிலோ,
கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மஞ்சள்தூள் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
தனியா தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சம் பழம் – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கருணைக்கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வேகவைத்த கருணைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு 20 நிமிடம் வதக்கி, உப்பு போட்டு, எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சேர்த்து இறக்கவும். சுவையான கருணைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
முருங்கைக்காய் பொடிமாஸ்
தேவை:
முருங்கைக்காய் – 10, துருவிய தேங்காய் – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
கடுகு, சோம்பு, சீரகம், உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து,
எண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக்காயை சிறு துண்டுகளாகவும், வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும். தேங்காயுடன் சீரகம், சோம்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சற்று பெரிய கடாயில் முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வேக வைத்த முருங்கைக்காய் துண்டுகளை இதில் போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி, வெந்ததும் இறக்கவும். புதுமையான முருங்கைக் காய் பொடிமாஸ் தயார்.
அப்பள பொடிமாஸ்
தேவை:
உளுந்து அப்பளம் - 10,
இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு பொரியல், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அப்பளங்களை சிறு சிறு துண்டுகளாக போட்டு பொரித்து, தனியே வைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு பொரியலை சேர்த்துக்கிளறவும். பொரித்த அப்பளத்தை கைகளினால் நொறுக்கி சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும். புதுமையான அப்பள பொடிமாஸ் தயார்.