

புதினா பரோட்டா
தேவை:
கோதுமை மாவு - 2 கப்
புதினா - 3/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் பெரிய உருண்டைகளாக எடுத்து திரட்டி இரண்டு பக்கமும் எண்ணெய் தேய்க்கவும். புடவை மடிப்பு போல் மடித்து மீண்டும் சுருட்டி வைக்கவும். சுருட்டி வைத்த மாவின் மேல் சிறிது எண்ணெய் விட்டு வைக்கவும்.
எல்லா மாவையும் இது போல் செய்த பின் முதலில் சுருட்டி வைத்த மாவை எடுத்து மீண்டும் சப்பாத்தியாக திரட்டவும். தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் தேக்கரண்டி கொண்டு நெய் தேய்த்து இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். அருமையான சுவையில் புதினா பரோட்டா தயார்.
மூங்க் தால் பரோட்டா
தேவை:
பாசிப்பருப்பு - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.
பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான பாசிப்பருப்பு பரோட்டா தயார்.
******
உருளைக்கிழங்கு பரோட்டா
தேவை:
கோதுமை மாவு - 1 கப்
உருளைக் கிழங்கு -3
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
கரமசாலா, மஞ்சள் தூள், சீரக தூள் - தலா 1/4 ஸ்பூன்
ஓமம், கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நறுக்கி ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து ஒருபாத்திரத்தில் சேகரித்துக் கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து விடவும். பிறகு அதில் ஓமத்தை கசக்கி அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு கோதுமை மாவை அந்த உருளைக்கிழங்கில் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பூரி தேய்ககும் கல்லில் பரோட்டாக்களாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களை தோசைக் கல்லில் போட்டு மேலே லேசாக எண்ணெய் தடவி ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான, சுலபமான உருளைக்கிழங்கு பரோட்டா தயார்.
காளான் பரோட்டா
தேவை:
காளான் - 10 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)
சீஸ் - 15 கிராம் (துருவியது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மைதா மாவு - 2 கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு போட்டு, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ஈரமான துணியால் மாவை சுற்றி தனியாக சிறிது நேரம் வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கிக்கொள்ளவும். இறுதியில் துருவிய சீஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைக்கவேண்டும்.
பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, அதன் நடுவே பெருவிரலை வைத்து ஓட்டை போட்டு, செய்து வைத்துள்ள காளான் கலவையை சிறிது வைத்து, மீண்டும் உருண்டையாக்கி, பின் சப்பாத்தி போல் தேய்த்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்.
இதே போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்த பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும். சுவையான காளான் பரோட்டா தயார்.