
இதுவரை எத்தனையோ விதமான ரசம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இன்று சற்று வித்தியாசமாக பொரிச்ச ரசம் செய்வது எப்படி? எனத் தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் அனைவருக்கும் மழையில் நனைவது பிடிக்கும் என்றாலும், சளி இருமல் வந்துவிடுமோ என பயந்து மழையில் நனைவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் இனி நீங்கள் மழையில் நனைந்து சளி பிடித்தாலும் பொரிச்ச ரசம் இருந்தால்போதும் அத்தனையையும் சரி செய்துவிடலாம்.
தேவையான பொருட்கள்:
வர மிளகாய் - 5
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
புளி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 4
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு, வரமல்லி, தேங்காய் துருவல், வரமிளகாய், மிளகு போன்றவற்றை கடாயில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் பொடித்துக் கொள்ளுங்கள்.
புளியை சுடுதண்ணீரில் போட்டு கரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதிலேயே தக்காளியை கைகளாலேயே நசுக்கி கரைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும். பின்னர் அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லித் தழை, உப்பு மற்றும் தட்டிய பூண்டு என அனைத்தையும் கரைத்து விட வேண்டும்.
பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை அதில் கலந்து, அனைத்தும் சரியாக உள்ளதா என ருசி பார்த்துக் கொள்ளுங்கள். உப்பு தேவைப்பட்டால் அப்போது சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை, கடுகு,, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். அவை நன்கு பொரிந்ததும் கரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொங்கி வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து மல்லித் தழைகளை தூவிவிட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் மழைக்கு இதமான பொரிச்ச ரசம் தயார்.