

டிபனுக்கு சப்பாத்தி ஓகே..ஆனால் அதற்கு உருளைக்கிழங்கு பெஸ்ட் சாய்ஸ். ஆனால் எப்போதும் தேங்காய் பட்ட சோம்பு போட்டு வைக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக வடநாட்டு ஸ்டைலில் தாபாக்களில் இருப்பது போல் உருளைக்கிழங்கு கறி கிரேவி செய்து பாருங்கள். சப்பாத்திகள் பறந்து விடும்.
செய்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் செய்து முடித்து சாப்பிடும் போது சொர்க்க அனுபவமாக இருக்கும் என்பது உண்மை. இதோ உருளைக்கிழங்கு கறி கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம் . கூடவே பொடேடோ 65 போனஸ் ரெசிபியும்..
1. உருளைக்கிழங்கு கறி கிரேவி!
தயிர் மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் -1 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1 டீஸ்பூன் மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
மேலே தந்திருக்கும் அனைத்து பொருட்களையும் தயிருடன் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும்.
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது- 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4
செய்முறை:
ஒரு அடுப்பில் கடாய் ஒன்று வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம் போட்டுப் பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கி பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி களை அரைத்து விழுதாக ஆக்கி அதை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போய் எண்ணெய் மிதக்கும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
தக்காளி வெங்காயம் விழுது நன்கு வெந்து எண்ணெய் பிரியும் தருணத்தில் மிதமான தீயில் வைத்து ஏற்கனவே செய்திருக்கும் தயிர் கலவையை அதில் ஊற்றி மேலும் கால் கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து மூடி போட்டு கொதிக்க விட்டு மூடி வைக்கவும்.
அடுத்து உருளைக்கிழங்கு கறி செய்ய தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு -3
வெண்ணெய் -2 க்யூப்ஸ்
வெங்காயம் - 1
குடைமிளகாய் -1
கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை
உருளைக்கிழங்குகளை முக்கால் பதமாக நன்கு வேக வைத்து சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய் விட்டு அதில் நீளமாக வெட்டிய வெங்காயம் குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கி, அத்துடன் உருளைக்கிழங்குகளையும் போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்கு வதக்கி ஏற்கனவே செய்து வைத்துள்ள தயிர் கலவை கிரேவியில் இந்த உருளைக்கிழங்குகளை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கவிட்டு கெட்டியானதும் (தேவைப்பட்டால் மட்டும் சிறிது நேர் ஊற்றவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை தழை தூவி இறக்கவும்.
இந்த கிரேவி சப்பாத்திக்கு வடநாட்டு கிரேவி போல் மிகவும் சூப்பராக அருமையாக இருக்கும். கஷ்டப்படாமல் செய்து இஷ்டத்திற்கு சாப்பிடலாம்.
2. பொடேடோ 65
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 3
இஞ்சி பூண்டு விழுது- 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/ 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
வெள்ளை எள்ளு- 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
கார்ன்பிளார் மாவு - 1டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு-1 ஸ்பூன்
எண்ணெய் - பொறிப்பதற்கு
உப்பு -தேவையானது
செய்முறை
உருளைக்கிழங்குகளை முதலில் நீல நீளமாக வெட்டி சிறிது கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடங்களில் எடுத்து வடித்து விடவும் .இதில் தந்துள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து , கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு நன்கு சிவக்கும் படி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அருமையான உருளைக்கிழங்கு 65 ரெடி. இதற்கு தக்காளி சாஸ் சூப்பர் சைட் டிஷ்.