போண்டா செய்வது எளிது. 6 பேருக்கு செய்ய அரை மணி நேரம் தான் ஆகும். பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிந்து இருக்கும். ஆனால் ஆண்கள் மற்றும் 15 வயதை தாண்டிய சிறுவர் சிறுமியருக்கும் சொல்லி கொடுக்கலாம். சரி. நேரே ரெசிப்பி செய்ய ஆயத்தம் ஆவோம். எதை சமைப்பது என்றாலும் முதலில் இரு கைகளையும் சோப்பு போட்டு கழுவ வேண்டும். இது தான் முதல் படி.
உருளை கிழங்கு போண்டா செய்வது எப்படி?
முதலில் முக்கால் கிலோ உருளை கிழங்கை கூக்கரில் வேக வைக்க வேண்டும். அது 10 நிமிடங்கள் ஆகும். அதற்குள் தாளிக்க எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலையை எடுத்து கொள்ள வேண்டும். கருவேப்பிலையை கையாலேயே சின்ன சின்ன துண்டுகளாக செய்து விடலாம்.
நான் தாளிக்க வெங்காயம் சேர்க்க வில்லை. எனக்கு வெங்காயம் பிடிக்காது. நீங்கள் விரும்பினால், வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக கத்தியால் நறுக்க வேண்டும். இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். உருளை கிழங்கை மிஞ்சும் அளவு வெங்காயம் இருக்க கூடாது.
இப்போது குக்கரை திறந்து வேக வைத்த உருளை கிழங்கை வெளியே எடுங்கள்; தோலுரியுங்கள். வாணலியில் கொஞ்சம் நல்ல எண்ணெய் விட்டு, அது சூடானதும் தாளிக்க வேண்டிய சாமன்களை போட்டு கிளருங்கள். உருளை கிழங்கை அதில் போட்டு நன்கு கிண்டுங்கள். இல்லை என்றால் தாளிக்கும் முன்பே கையால் உருளை கிழங்கை மசித்து விடுங்கள்.
ஒரு மூன்று நிமிடங்கள் ஆனதும் மசால் தயாராகி விடும். இப்போது நீங்கள் ஒரு அரை கிலோ கடலை மாவை தண்ணீர் சேர்த்து கையால் நன்கு பிசையுங்கள். ரொம்ப நீராக இருக்க கூடாது. சற்று மாவு தூக்கலாக இருக்க வேண்டும்.
இப்போது எல்லாம் ரெடி. அடுப்பில் வாணலியை வைத்து அரை லிட்டர் நல்ல எண்ணெயை சூடு ஏற்ற வேண்டும். நல்ல கொதி நிலை வந்ததும், கரைத்து வைத்து இருக்கும் மாவை சற்று வாணலியில் போட்டு பொறிகிறாதா என்று சோதனை செய்து பார்க்க வேண்டும்.
கிழங்கை மசாலாவை கையால் உருட்டி, சின்ன பந்து போல உருண்டைகளாக பிடித்து, கடலை மாவில் (உப்பு போட்டது) போட்டு எடுத்து வாணலியில் போட வேண்டும்.
போண்டா சில நிமிடங்கள் கொதிக்க வேண்டும். அதன் நிறம் சற்று மாறும் போது அதை எடுத்து வேறு பாத்திரம் (எண்ணெய் வடிகட்ட) உள்ளே போட வேண்டும்.
ஒரே சமயம் 5 அல்லது 6 போண்டாவை பொறித்து விடலாம். இப்போது சுட சுட போண்டா ரெடி.
அம்புட்டு தான். உருளைகிழக்கு போண்டா தயார். நன்கு ரசித்து சாப்பிடுங்கள்.
சிலருக்கு முட்டை போண்டா ரொம்ப பிடிக்கும். அது செய்வதும் இதே போலத்தான். அவிச்ச முட்டையை இரண்டாக நறுக்கி (நீள வாக்கில்) கடலைமாவில் முக்கி எண்ணெயில் போடலாம். உங்களுக்கு எத்தனை முட்டை போண்டா வேண்டுமோ அதற்கு ஏற்ப முட்டைகளை அவித்து கடலை மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொறியுங்கள்.
ஜம் ஜம் குலாப் ஜாமுன் (Gulab Jamun) எப்படி செய்ய வேண்டும்..?
தேவையானவை:
1. MTR instant Gulab Jamun 2
2. சக்கரை 3 டம்ளர்
3. 6 டம்ளர் தண்ணீர்
4. ஏலக்காய்
5. நெய் ( ஆவின் பட்டர்)
முதலில் இரண்டு கைகளையும் சோப் போட்டு கழுவுங்கள். பின்னர் நாம் குலாப் ஜாமுன் உருண்டை செய்ய ஆரம்பிக்கலாம். சற்று அதிகமாக ஜாமுன் வர வேண்டும் என்பதால் தான் 2 MTR பாக்கெட்.
ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமுன் (Gulab Jamun) மாவை திட்டு இல்லாமல் மெதுவாக கலக்கி, சாப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசையுங்கள். அது காய்ந்து விடாமல் இருக்க சிறிது நெய்யை அதன் மீது எல்லா பக்கங்களிலும் தடவுங்கள்.
அடுத்து பாகு செய்ய..
ஒரு வாணலியில் 3 டம்ளர் சக்கரை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பாகு ரெடி ஆனதா என்று பார்க்க வேண்டும். ஒரு கரண்டியில பாகை தொட்டு எடுத்து பார்த்தால் 'பிசு பிசு' என இருக்கும். நீராக இருந்தால் மீண்டும் கொதிக்க வைக்கவும். இப்போது பாகு ரெடி.
பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடியுங்கள். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி உருண்டைகளை போட்டு பொறித்து விடலாம். மெல்லிய பிரவுன் கலர் வந்ததும் ஜாமுனை வெளியே எடுத்து விடலாம்.
பாகு சற்று ஆறிப்போய் இருக்கும். அதில் நீங்கள் எடுத்த ஜாமுன் உருண்டைகளை போடுங்கள். நாம் இரண்டு பாக்கெட் எடுத்து செய்ததால் கிட்டத்தட்ட 30 அல்லது 40 ஜாமுன் கிடைக்கும்.
இப்போது சாப்பிடலாம். பகிர்ந்து சாப்பிடுங்கள். சுவைத்து சாப்பிடுங்கள். அக்கம் பக்கம் கொடுத்து உண்ணுங்கள். நாவில் எச்சில் உறுகிறதா..? சாப்பிடுங்கள். இன்னும் 2 மாதங்கள் தான். தீபாவளி வந்து விடும். தீபாவளிக்கு குலோப் ஜாமுன் செய்து அசத்துங்கள்.