உருளைக்கிழங்கு சாண்ட்விச் என்பது மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சாண்ட்விச் ஆகும். இதை காலை உணவாகவோ அல்லது குழந்தைகளுக்கு மதிய உணவாகவோ செய்து தரலாம். இதற்காக சாண்ட்விச் மேக்கர் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அந்த பதத்திற்கு நம்மால் செய்ய முடியும். சாண்ட்விச் மேக்கர் இல்லாதவர்கள் நேரடியாக தோசைக் கல்லில் வைத்து சூடாக்கியும் சாப்பிடலாம். இந்த சாண்ட்விச் செய்வதற்கு கோதுமை ரொட்டியைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியமானதாகும். சரி வாருங்கள் இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான உருளைக்கிழங்கு சாண்ட்விச் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி தூள் - ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் - ½ ஸ்பூன்
சிரகப் பொடி - ½ ஸ்பூன்
கரம் மசாலா - ½ ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 ஸ்பூன்
ரொட்டித் துண்டுகள் - 8
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், கருவேப்பிலை சேர்த்து லேசாக வறுக்கவும்.
அதன் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்குங்கள். அடுத்ததாக மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும். இப்போது சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் 3 நிமிடம் கிளறி விடுங்கள்.
இவற்றில் பச்சை வாசனை போனதும், நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித் தழை சேர்த்து, அடுப்பை அணைத்து உருளைக்கிழங்கு மசாலாவை வேறு பாத்திரத்தில் மாற்றி, தனியாக வைத்து விடுங்கள்.
பின்னர் தக்காளி கெச்சப்பை ஒரு பிரட் தூண்டில் லேசாகத் தடவும். அதன் மேலே உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். மற்றொரு பிரட் ஸ்லைஸில் வெண்ணை தடவி, உருளைக்கிழங்கு வைத்த பிரட்டின் மேலே மூடிவிடுங்கள். இறுதியாக இதை அப்படியே எடுத்து சாண்ட்விச் மேக்கரில் வைத்து, பிரட் பொன்னிறமாக மாறும் வரை சமைத்தால், சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி உருளைக்கிழங்கு சாண்ட்விச் தயார். இதைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.