ஒரு காலத்தில் சிறப்பாக செயல்பட்ட நீங்கள் இப்போது ஏன் அதிக நேரத்தை பெட்டிலும், சோபாவிலும் படுத்துக்கொண்டு, எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறீர்கள்? ஏன் எப்போதும் உங்களுக்கு சோர்வாகவே உள்ளது? இதை சோம்பேறித்தனம் என நினைத்தீர்கள் என்றால், அதுதான் தவறு. நீங்கள் வாழ்க்கையில் விரக்தியடைந்து விட்டீர்கள் என அர்த்தம். விரக்திமனநிலை என்பது சோம்பேறித்தனத்தை விட மிக மோசமானது. அதற்கான 6 அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. எதிலும் விருப்பமில்லாமல் போதல்: உங்களுடைய ஒவ்வொரு நாளும் எவ்வித விருப்பமும் இல்லாமல் போகும். ஏதோ வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கையைக் கழிப்பீர்கள். எதை செய்வதற்கும் விருப்பம் இருக்காது. ஒரு காலத்தில் நீங்கள் ஆசையாக செய்த விஷயங்களைக் கூட செய்வதற்கான முனைப்பு இருக்காது. எப்போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த விஷயங்களை நினைத்து வருந்திக் கொண்டிருப்பீர்கள். அது நிகழ்காலத்தில் எதையுமே செய்யவிடாது.
2. குறைந்த மோட்டிவேஷன்: சோம்பேறித்தனம் என்பது, நம்முடைய குணநலங்களில் இருக்கும். அதை நாம் நினைத்தால் மாற்ற முடியும். ஆனால், வாழ்க்கையில் விரக்தி என்பது உங்களுடைய மோட்டிவேஷன் அனைத்தையும் குறைத்துவிடும். எந்த வேலையை செய்வதற்கும் உங்களுக்கு உந்துதல் இருக்காது. இதையெல்லாம் செய்து என்ன ஆகப்போகிறது? என்ற எண்ணமே தோன்றும். இதுபோன்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் விரக்தியில் உள்ளீர்கள் என அர்த்தம்.
3. குறைந்த ஈடுபாடு: சோம்பேறித்தனத்திற்கும், விரக்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு காலத்தில் முழுமூச்சுடன் ஆர்வமாக செய்த விஷயங்களைக் கூட, செய்வதற்கு விருப்பம் இருக்காது. இது சோம்பேறித்தனத்தை விட மிகவும் கொடியதாகும். உங்களை வாழ்வில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிடும்.
4. கோபம்: அடிக்கடி தேவையில்லாமல் கோபம் கொண்டாலும், நீங்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளீர்கள் என அர்த்தம். விரக்தி மனநிலை நாம் காணும் அனைத்தையும் தவறாகவே பார்க்க வைக்கும். உங்களது கோபத்தை நெருங்கிய நபர்கள் மீது காட்ட ஆரம்பிப்பீர்கள். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கும் அதிக கோபம் உண்டாகும்.
5. தன்னை பார்த்துக் கொள்ளாமல் போதல்: விரக்தியின் மிகப்பெரிய அறிகுறி என்னவென்றால், உங்களை நீங்கள் சுத்தமாக கவனித்துக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் உணவு முறையில் கட்டுப்பாடுகள் இருக்காது. உடலை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. உடல் மீது கவனமின்றி ரியாலிட்டியிலிருந்து தப்பிக்க அதிகமாக சாப்பிட ஆரம்பிப்பீர்கள். இது உங்களது தோற்றத்தையே முழுவதும் மாற்றிவிடும்.
6. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மோசமாகும்: கடைசியில் உங்கள் வாழ்க்கையில் எல்லாம் மோசமாக மாறும். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் தன்மையை நீங்கள் இழக்க ஆரம்பிப்பீர்கள். உடல் நலம் போகும், உறவுகள் போகும், பணத்தையும் இழப்பீர்கள், இறுதியில் எதுவுமே இல்லாத நிலை கூட ஏற்படலாம்.
எனவே இந்த ஆறு அறிகுறிகள் உங்களிடம் தென்பட்டால் உடனடியாக அதை மாற்றுவதற்குண்டான வழியைத் தேடி செயல்படுங்கள். எதையும் செய்யாமல் அமைதியாய் இருப்பதால், எதுவும் மாறப் போவதில்லை. எனவே உங்களை முன்னேற்றும் ஏதோ ஒரு செயல்களை தைரியமாக செய்து கொண்டிருங்கள்.