
தேவையான பொருட்கள்:
பொட்டுக் கடலை மாவு - இரண்டரை ஆழாக்கு, அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன், முளை கட்டிய பச்சைப் பயறு - 1 கப், முளை கட்டிய கொண்டைக் கடலை – 1 கப், சிப்பிக் காளான் (நறுக்கியது) - 1 கப், பட்டாணி (பச்சை) - அரை கப், வறுத்த வேர்க்கடலை - அரை கப், கேரட், பீன்ஸ்,உருளைக் கிழங்கு - 2 கப் (பொடியாக நறுக்கியது), பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 6 (நீளவாக்கில் கீறவும்), மிளகாய்ப் பொடி, தனியா பொடி - 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன், கடுகு, சீரகம் - தாளிக்க, எலுமிச்சம் பழம் 1, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கப், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா (எல்லாம் சேர்ந்து பொடியாக நறுக்கியது) - 1 கப்.
செய்முறை:
ஒரு நாள் முன்னதாகவே பயறு, கொண்டைக்கடலை இவற்றை ஊறவைத்து முளை வந்த பிறகு எடுத்துக் கொள்ளவும். குக்கரில் செபரேட்டர்களில் ஒன்றில் தானிய வகைகளை சிறிது உப்பு சேர்த்து வைக்கவும். இன்னொன்றில் காய்கறி, பட்டாணி, சிப்பிக் காளான் இவற்றை வைத்து சிறிது உப்பிட்டு வேகவைக்கவும். பத்து நிமிடங்களில் குக்கரை அணைத்து விடவும்.
செபரேட்டர்களில் வெந்து இருக்கும் தானிய, காய்கறி வகைகளிலிருந்து நீரை வடித்து வைக்கவும். பொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து இந்த நீரை சற்று சுட வைத்து மாவில் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும். இந்த மாவைக் கட்டியில்லாமல் சேர்த்துப் பிசைந்து, முறுக்குக் குழலில் ஓமப் பொடி அச்சிட்டு, இடியாப்பத் தட்டுக்களிலோ (அ) இட்லித் தட்டுக்களிலோ நூடுல்ஸைப் பிழிந்து, குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, தனியா பொடி சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து, வெந்த பயறு வகை, காளான், காய்கறி சேர்த்து வதக்கவும். வேர்க்கடலையைப் பாதியாக உடைத்து தனியே சிறிது நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும். இறுதியாக வெந்த நூடுல்ஸை சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து நன்றாகக் கலக்கவும். இதுவே பொட்டுக் கடலை மிக்ஸட் நூடுல்ஸ். புரதம் செறிந்த சுவையான மாலை நேர சிற்றுண்டி.