
நம் சமையலறையில் எள்ளின் பயன்பாடு குறைவுதான். ஆனால் இதன் நன்மைகளை பட்டியலிட, கட்டாயம் உணவில் சேர்க்க ஆரம்பித்து விடுவோம். மற்ற விதைகளுடன் ஒப்பிடுகையில் இது உடல் நலத்திற்கு பல பயன்களைத் தருகிறது.
நீரிழிவு, குறைந்த ரத்த அழுத்தம், மற்றும் பல்வேறு வகையான புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. நாள்பட்ட மன தளர்ச்சியை போக்க உதவுகிறது. எள்ளின் நன்மைகள் சிலவற்றை பார்ப்போம்.
எலும்புகளை வலுவாக்கும், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் நாள்பட்ட மன தளர்ச்சியை போக்க உதவுகிறது.
துத்தநாகம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை இருப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது. இவை எலும்புகளை வலுப்படுத்தி சரிசெய்யவும் பயன்படுகிறது.
எள்ளில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தம் வராமல் தடுப்பதுடன் கட்டுப்படுத்தவும் செய்கிறது.அதேபோல் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.
எள்ளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வலுவாக உள்ளதால் வாய்ப்புண் மற்றும் ஈறு பிரச்னைகளை வரவிடாமல் தடுக்கிறது. வெதுவெதுப்பான நீரில் எள்ளைப்போட்டு வாய் கொப்பளிக்க வாய் சுத்தமாவதுடன் வாய் ஆரோக்கியம் மேம்படும்.
எள்ளில் இயற்கையாகவே நிரம்பியிருக்கும் நார்ச்சத்து உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. மலச்சிக்கலை சரி செய்வது டன் வயிற்று போக்கையும் கட்டுப்படுத்த உதவுகிறது. நார் சத்தானது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்றுகின்றது. இதனால் இதய நோய்களைத் தடுப்பதுடன், இதயத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
எள்ளில் இயற்கையாகவே நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் ஸ் இருப்பதால் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றுகிறது. பிரீரேடிக்கல்ஸ் ஏற்படாமல் தவிர்க்கிறது.
எள்ளில் இருக்கும் துத்தநாகம் கொலாஜன் உருவாவதற்கு முக்கிய காரணியாக இருப்பதால் தலைமுடி, தோல், திசு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. எள் அழகு சாதனப் பொருள்களில் ஒன்றான ஃபேஸ்பேக்குகளில் பயன்படுத்தப் படுகிறது. வயதாவதை தடுக்க உதவும். சரும சுருக்கத்தை போக்கி இறுக்கமாக்குகிறது.
இவ்வாறு பலவிதங்களில் பயன்தரும் எள்ளை உணவில் சேர்த்து உடல்நலம் காப்போம்.