இந்திய உணவு வகைகளில், எளிமையாகச் செய்யப்படும் கோதுமை புல்கா ரொட்டி, ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்த மெல்லிய, மென்மையான மற்றும் கச்சிதமான அளவில் இருக்கும் ரொட்டிகள், நாடு முழுவதும் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக வட இந்தியாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் புல்கா ரொட்டி சுவையானது மட்டுமின்றி, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்தப் பதிவில் சரியான புல்கா ரொட்டியை எப்படி தயாரிப்பது எனத் தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:
2 கப் கோதுமை மாவு
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
ரொட்டியின் மேல் தேய்ப்பதற்கு நெய் அல்லது எண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு 20 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள்.
மாவு நன்கு ஊறியதும் சிறு சிறு அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் அந்த உருண்டைகளை வட்டமாக சப்பாத்தி போல தட்டிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக தவா அல்லது கிரில் பயன்படுத்தி தட்டி வைத்துள்ள புல்கா ரொட்டிகளை 30 வினாடிகள் எண்ணெய் தடவாமல் இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வையுங்கள். புல்கா ரொட்டி நன்றாக உப்பி வர, ஒரு சுத்தமான டவலைப் பயன்படுத்தி அதன் மேலே ஒரு அழுத்தம் கொடுங்கள்.
இறுதியில் புல்கா ரொட்டி நன்கு வெந்ததும் அதை வெளியே எடுத்து, பரிமாறுவதற்கு முன், அதன் மேலே நெய் அல்லது எண்ணெய் தடவி பரிமாறினால், சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த ரொட்டிக்கு உங்களுக்கு விருப்பமான சைட் டிஷ் தயாரித்து சாப்பிடலாம்.