
கோடைக் காலத்தில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளை தீர்ப்பதில் கில்லியாக திகழும் பசலைக்கீரையைக் கொண்டு சுவையான ரெசிபிகள் செய்யலாம் வாருங்கள்.
பஞ்சாபி பக்கோடி காதி:
கோதுமை மாவு 1 கப்
பசலைக்கீரை 1 கப்
உப்பு தேவையானது
ஓமம் 1 ஸ்பூன்
காரப்பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
கடலை மாவு 1/4 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 2
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகு 6
காய்ந்த மிளகாய் 2
வெங்காயம் 1
தயிர் 1 கப்
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கீரை, ஓமம், உப்பு, மஞ்சள் தூள், காரப்பொடி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கையால் நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மாவை கையால் எடுத்து சின்ன சின்னதாக கிள்ளி பக்கோடா போல போட்டு நன்கு சிவக்க பொரித்தெடுக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், விழுதாக அரைத்த இஞ்சி பச்சை மிளகாய், தயிர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிளகு, சீரகம், வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களை சேர்த்து கொதிக்கவிடவும். பத்தே நிமிடத்தில் மிகவும் ருசியான பஞ்சாபி பக்கோடி காதி தயார்.
சப்பாத்தி, பூரிக்கும், சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் மிகவும் அருமையான சைட் டிஷ் தயார்.
பசலைக்கீரை கடையல்:
பசலை கீரை 2 கப்
சாம்பார் வெங்காயம் 10
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
பசலைக் கீரை இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு பச்சை மிளகாய், நறுக்கிய பசலைக் கீரையையும் சேர்த்து வேக விடவும். கீரையின் நிறம் மாறாமல் இருக்க திறந்து வைத்து இரண்டு நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி தனியாத் தூள், தேங்காய் துருவல், தேவையான உப்பு சேர்த்து அதில் வெந்த பசலைக் கீரையை சேர்த்து மத்து கொண்டு நன்கு மசிக்கவும். மத்து இல்லையென்றால் கவலை வேண்டாம் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மிகவும் ருசியான சத்தான பசலைக்கீரை கடையல் தயார்.
ஹெல்தி பசலைக்கீரை சூப்:
பசலைக்கீரை 1 கப்
வெந்த பயத்தம் பருப்பு 1/4 கப்
தக்காளி 1
வெங்காயம் 1
பூண்டு 6 பல்
எலுமிச்சம்பழம் 1 மூடி
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
உப்பு தேவையானது
வெண்ணெய் 1 ஸ்பூன்
வெங்காயம், தக்காளி, பூண்டு, பசலைக்கீரை ஆகியவற்றை வாணலியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் போட்டு வதக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வாணலியில் சிறிது வெண்ணெய் போட்டு வெந்த பயித்தம் பருப்பு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ரெண்டு கப் தண்ணீர்விட்டு அதில் அரைத்த பசலைக்கீரை விழுதையும் சேர்த்து கொதிக்கவிடவும். இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பரிமாற ருசியான பசலைக்கீரை சூப் தயார்.