ஊறவைக்க வேண்டாம், அரைக்க வேண்டாம்! 30 நிமிடத்தில் மொறுமொறு 'மத்தூர் வடை' செய்வது எப்படி?

பருப்பு இல்லாமலேயே சட்டென்று செய்யக்கூடிய கர்நாடகா ஸ்பெஷல் ரயில்வே வடை ரகசியம்!
மத்தூர் வடை|a hot mattur vada served with coconut chutney
மத்தூர் வடைAI image
Updated on
MM strip
MM strip

மெது வடை, மசால் வடை. பருப்பு வடை, கீரை வடை, சாம்பார் வடை, ரஸ வடை, தயிர் வடை, வாழைப்பூ வடை என பலவிதமான வடைகள் தமிழ்நாட்டில் பிரபலமாகத் திகழ்கின்றன. இவற்றை அவ்வளவு சுலபத்தில் நினைத்த நேரத்தில் செய்ய முடியாது.

கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் பெங்களுருக்கும் மைசூருவிற்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர் மத்தூர் (Maddur). சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1917 ஆம் ஆண்டில் இராமச்சந்திர புத்யா என்பவரால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த மத்தூர் வடை இன்று கர்நாடகா முழுவதும் பிரபலமாகத் திகழ்கிறது.

தற்போது மத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும்போது ரயில் நிலையத்தில் விற்கப்படும் இந்த புகழ்பெற்ற மத்தூர் வடையை ரயில் பயணிகள் தவறாமல் வாங்கிச் சுவைத்து மகிழ்வது வழக்கமாக உள்ளது.

அரைமணி நேரத்தில் மிகச்சுலபமாக செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டி இந்த மத்தூர் வடை. மற்ற வடைகளைச் செய்ய பருப்பை ஊற வைத்து அரைக்க வேண்டும். இதற்கு அதிகநேரம் தேவைப்படும். ஆனால் இந்த கர்நாடகா ஸ்பெஷல் மத்தூர் வடை செய்ய எதையும் ஊறவைக்கத் தேவையில்லை. நினைத்த நேரத்தில் செய்தவிட முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

கர்நாடகா ஸ்பெஷல் மத்தூர் வடையை எப்படிச் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

மத்தூர் வடை செய்யத் தேவையான பொருட்கள்

வெங்காயம் – இரண்டு

பச்சை மிளகாய் – மூன்று

இஞ்சி – ஒரு சிறு துண்டு

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கொத்துமல்லி – ஒரு கைப்பிடி அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

அரிசி மாவு – ஒரு கப்

மைதா மாவு – ஒரு கப்

ரவை – அரை கப்

எண்ணெய் – அரை லிட்டர்

மத்தூர் வடை|a passenger in train with  mattur vada
மத்தூர் வடைAI image

பருப்பு இல்லாமல் மொறுமொறு மத்தூர் வடை செய்முறை

வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலையை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி இவற்றைப் போட்டு நன்றாகப் பிசைய வேண்டும். பின்னர் அதில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு முதலானவற்றைப் போட்டு நன்றாக பிசையவேண்டும்.

தொடர்ந்து அரிசி மாவு, மைதா மாவு, ரவை முதலானவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு அதில் சிறிதளவு காய்ச்சிய எண்ணெயை ஊற்றி நன்றாகப் பிசைய வேண்டும். பின்னர் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாக பதத்திற்குப் பிசைந்துகொள்ள வேண்டும். தண்ணீரை அதிகமாவும் ஊற்றாமல் குறைவாகவும் ஊற்றாமல் சரியான அளவிற்கு சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக வடை தட்டும் பதத்திற்குப் பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் ஒரு லட்டு உருண்டைஅளவிற்கு மாவை எடுத்து வாழை இலையில் எண்ணெயைத் தடவி உள்ளங்கை அளவிற்கு அகலமாக தட்டிக்கொள்ள வேண்டும். எண்ணெயில் போட்டு சிறு தீயில் இப்படியும் அப்படியுமாகத் திருப்பி சற்று சிவந்த உடன் எடுத்துவிட வேண்டும். அதிகம் சிவக்கக் கூடாது.

அரைமணி நேரத்தில் மிகச்சுலபமாக யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு மாலை நேரச் சற்றுண்டி இந்த மத்தூர் வடை. அப்படியே சாப்பிடலாம். தேங்காய் சட்டினி இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நாவில் நீர் ஊறும் மோர்வடைக் குழம்பு & சௌ-சௌ சிப்ஸ்: ஞாயிறு மதிய உணவு இனி சொர்க்கம் தான்!
மத்தூர் வடை|a hot mattur vada served with coconut chutney

இந்த எளிய செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம், திடீரென வரும் விருந்தினர்களுக்கோ அல்லது உங்களின் மாலை நேரப் பசிக்கோ, பருப்பு ஊறவைக்கும் நசநசப்பு இல்லாமல் 30 நிமிடங்களில் பேக்கரி ஸ்டைல் மொறுமொறு சிற்றுண்டியை உங்களால் சமைத்து பரிமாற முடியும். உங்களின் மாலை நேர டீ டைம் இனி கூடுதல் சுவையாக மாறும்.

logo
Kalki Online
kalkionline.com