சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த குயினோவா சாலட், உப்புமா மற்றும் புலாவ் செய்வது எப்படி?

Quinoa recipes nutritious and healthy.
quinoa recipes

குயினோவா என்பது புரதச்சத்து நிறைந்த தானியம். அரிசி, கோதுமை போன்ற கார்போ உணவுகளுக்கு பதிலாக பிரபலமாகி வரும் தானியம் இது. நம் நாட்டு சிறுதானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற தானியங்களைப் போன்றது தான் இது. குளூட்டன் ஃப்ரீ தானியமான இதில் 9 வகையான அமினோ அமிலங்களும் இரும்பு சத்தும் நிறைந்தது.

1. குயினோவா சாலட்

குயினோவா சாலட்
குயினோவா சாலட்

குயினோவா 1 கப் 

வெள்ளரிக்காய் பாதி

தக்காளி 1

வெங்காயம் 1

மிளகு 1 ஸ்பூன்

உப்பு தேவையானது

புதினா சிறிது

கொத்தமல்லி சிறிது

ட்ரெஸ்ஸிங் செய்ய: ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, மிளகு

குயினோவை சமைப்பதற்கு முன்பு நன்கு கழுவி கொள்ளவும். 1:2 என்ற வீதத்தில் தண்ணீர்விட அதிகம் குழையாமலும், தண்ணீர் காணாமல் போய் வறண்டு போகாமலும் இருக்கும். மெதுவாக வேக வைத்து ஆறவிடவும்.

காய்கறிகளை மெல்லியதாக துருவிக் கொள்ளவும் அல்லது பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா ஆகியவற்றையும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த குயினோவா, பொடியாக நறுக்கிய அல்லது துருவிய காய்கறிகள் மற்றும் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தேவையான உப்பும் போட்டு கலக்கவும். ட்ரெஸ்ஸிங் செய்ய மேலாக சிறிது ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாற சுவையான மற்றும் ஆரோக்கியமான சாலட் தயார்.

2. குயினோவா உப்புமா

குயினோவா உப்புமா
குயினோவா உப்புமா

புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த குயினோவாவில் உப்புமா செய்வது ஆரோக்கியமானது மட்டுமல்ல சுவையானதும் கூட.

குயினோவா 1கப் 

தண்ணீர் 2 கப் 

வெங்காயம் 1

பட்டாணி 1/4 கப்

கேரட்  1

குடமிளகாய் பாதி

பச்சை மிளகாய் 2

உப்பு தேவையானது

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

கொத்தமல்லி சிறிது

தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 

குயினோவை நன்கு கழுவி தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், காரட், குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன், கடலைப் பருப்பு 1 ஸ்பூன், கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அத்துடன் கேரட், பட்டாணி, குடைமிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். அத்துடன் குயினோவையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு தண்ணீர் தெளித்து கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தட்டை போட்டு மூடி வேக விடவும். நன்கு வெந்ததும் கிளறி இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைசாறு கலந்து பரிமாற மிகவும் ருசியான குயினோவா உப்புமா தயார்.

இதையும் படியுங்கள்:
கிச்சன் கில்லாடிகளே உங்களுக்கான சமையல் டிப்ஸ் இதோ!
Quinoa recipes nutritious and healthy.

3. குயினோவா புலாவ்

குயினோவா புலாவ்
குயினோவா புலாவ்

குயினோவா 1 கப்

வெங்காயம் 1

காரட் 1

பீன்ஸ் சிறிது

தக்காளி 1

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

கரம் மசாலா 1/2 ஸ்பூன்  மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் 

கொத்தமல்லி

குயினோவை நன்கு கழுவி நீரை முழுவதுமாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். கடைசியாக குயினோவை சேர்த்து தேவையான தண்ணீர் (1:2) விட்டு உப்பு சேர்த்து வேக விடவும். உதிர் உதிரான மிகவும் சூப்பரான குயினோவா புலாவ் தயார். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். விருப்பப்பட்டால் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழியலாம்.

கெட்டியான தயிர் அல்லது வெங்காய ராய்தாவுடன் பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com