உங்கள் வீட்டிற்கு திடீரென உறவினர்கள் வந்தால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது எனத் தெரியவில்லையா? இனி அந்த கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் ராகி மாவு இருந்தால் போதும், செம சுவையில் பக்கோடா செய்து உறவினர்களை அசத்தலாம். ராகி மாவு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகும். அதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவது நல்லது. சரி வாருங்கள், ராகி பக்கோடா எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - ¼ கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் ராகி மாவு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்து கையால் பிசைந்து கொள்ளவும்.
அடுத்ததாக வெங்காயம், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பக்கோடா மாவு பதத்திற்கு உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீரை அதிகமாக சேர்த்தால் பக்கோடா போட முடியாது.
அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பக்கோடா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் போடுங்கள். மாவை உதிரி உதிரியாக விட வேண்டும். பின்னர் மிதமான தீயில் மூன்று நிமிடம் வேகவைத்து எடுத்தால், சூப்பர் சுவையில் ராகி பக்கோடா தயார்.
இது சாதாரண பக்கோடாவை விட சுவை நன்றாக இருக்கும். அதேசமயம் ராகி மாவு உடலுக்கு நல்லது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்த ராகி பக்கோடா இருக்கும்.