அசத்தலான ருசியுடன் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய இந்த கேழ்வரகில் ருசியான மினிவெஜ் கொழுக்கட்டை எப்படி செய்வது என பார்க்கலாம்.
கேழ்வரகு மாவு ஒரு கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
மிளகுத்தூள் ஒரு ஸ்பூன்
கேரட் ஒன்று
இஞ்சி சிறு துண்டு
பச்சை மிளகாய் ஒன்று
தேங்காய் துருவல் அரை கப்
எலுமிச்சம்பழம் ஒன்று
கொத்தமல்லி சிறிது
தாளிக்க : கடுகு,
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
ரெண்டு கப் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் விட்டு தேவையான உப்பு போட்டு கொதி வந்ததும் இறக்கி கேழ்வரகு மாவில் கொட்டி கிளறவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணை விட்டு தாளித்து வெந்த கேழ்வரகு உருண்டைகளை சேர்த்து தேங்காய் துருவல், அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு கிளறி கடைசியாக ஒரு மூடி எலுமிச்சம் பழம் பிழிய சுவையான, சத்தான மாலை நேர சிற்றுண்டி தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மடக்கு பூரி:
ஸ்ரீவில்லிபுத்தூரில் தட்டு வடையும், மடக்கு பூரியும் மிகவும் பிரசித்தம். அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மைதா ஒரு கப்
உப்பு. 2 சிமிட்டு
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
சர்க்கரை ஒரு கப்
எண்ணெய் பொரிக்க
மைதா மாவில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய்விட்டு தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு பிசைந்து மேலே சிறிதளவு எண்ணெய்விட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்.
சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒற்றைக் கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். மைதா மாவு இரண்டு ஸ்பூன் எடுத்து எண்ணெய் விட்டு நன்கு கரைத்து வைக்கவும்.
பிசைந்த மாவை திரட்டி அதன் மேல் எண்ணெயில் கரைத்த மைதா மாவை தடவி இரண்டாக மடித்து திரும்பவும் எண்ணெயில் கரைத்த மைதாவை தடவி நான்காக மடிக்கவும். இதனை கத்திக் கொண்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி பூரி போல் நீளவாக்கில் திரட்டவும். இதனை எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு இரண்டு நிமிடம் ஊறியதும் எடுத்து வைக்க சுவையான மடக்கு பூரி தயார்.