எப்போதும் பச்சரிசிப் பொங்கல் செய்து சாப்பிட்டே சலித்துவிட்டதா? அல்லது ரவா உப்புமாவாக சாப்பிட்டு நாக்கு சுவை மறந்துவிட்டதா? அப்போது இந்த ரவா பொங்கலை செய்துப்பாருங்கள். இது டையட்டில் இருப்பவர்களுக்கும் ஏற்ற ஒரு உணவாகும். ஆம், காலை உணவாக இதனை எடுத்துக்கொண்டாலே போதும் டயட் கலையாமல் சுவையாக சாப்பிடலாம்.
அதேபோல் பொருட்களும் அவ்வளவாகத் தேவையில்லை. தாளிப்பிற்கு மட்டும்தான் சற்றுப் பொருள் அதிகம். மற்றப்படி எளிமையாக செய்து சாப்பிடுவதற்கு இந்த ரவா பொங்கலைத் தேர்ந்தெடுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
ஒரு கப் ரவை
நெய்
½ கப் பாசிப் பயிரு
தண்ணீர்
உப்பு
½ ஸ்பூன் மிளகு
15 முந்திரி
½ ஸ்பூன் சீரகம்
இஞ்சி
½ ஸ்பூன் பெருங்காயம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு ரவை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.
2. மறுபுறம் பாசிப் பருப்பை அதே பாத்திரத்தில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதனை குக்கரில் மாற்றி மூன்று விசில் வந்தவுடன் இறக்கிவிடவும்.
3. இப்போது வேகவைத்த பருப்புடன் வறுத்து வைத்த ரவையை சேர்த்து சமைக்கவும். கட்டிகள் இல்லாத அளவுக்கு ஒரு நான்கு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். ரவை நன்றாக வெந்தப் பிறகு அடுப்பை நிறுத்திவிடவும்.
4. பின்னர் மற்றொரு பாத்திரத்தில் நெய் சேர்த்துவிட்டு கடுகு, முந்திரி, சீரகம், இஞ்சி, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து எடுத்துக்கொள்ளவும். அதனைப் பொங்கலுடன் சேர்த்து ஒருமுறை கிளறினால் ரவை பொங்கல் ரெடி!
சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து ரவைப் பொங்கலைப் பரிமாறவும்.