வாழைக்காய் தோல் சீவி தூக்கி போடுவீங்களா? என்னங்க... இப்படி துவையல் செஞ்சு பாருங்க!

Raw banana peel chutney in serving bowl
Raw banana peel chutney
Published on

வாழைக்காயை சமையலுக்குப் பயன்படுத்தும்போது, அதன் தோலை நாம் பெரும்பாலும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், இந்த தோலில், ஏராளமான சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வாழைக்காய் தோல், செரிமானத்திற்கு உதவுவதுடன், பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. வீணாகப் போகும் இந்த சத்தான தோலை வைத்து, அற்புதமான சுவையுடன் ஒரு துவையலை எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

வாழைக்காய் தோல் துவையல் ரெசிபி

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் தோல் (2-3 வாழைக்காயின் தோல்)

சின்ன வெங்காயம் - 1/2 கப் 

பூண்டு - 4-5 பற்கள்

காய்ந்த மிளகாய் - 2-3 (காரத்திற்கு ஏற்ப)

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை நன்கு கழுவி, தோலை சீவி எடுக்கவும்.

சீவிய தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உடனடியாக தண்ணீரில் போடவும் இல்லையெனில் கருத்துப் போகும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நறுக்கிய வாழைக்காய் தோலை சேர்த்து, சிறிது உப்பு போட்டு 5-7 நிமிடங்கள் வேக வைக்கவும். தோல் மென்மையாக வெந்ததும், தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.

பின்னர், ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான வாழைக்காய் கோலா உருண்டை - பால்கோவா ரோஸ் மில்க் செய்யலாமா?
Raw banana peel chutney in serving bowl

அதே கடாயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வதக்கிய வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், வெந்த வாழைக்காய் தோல், புளி, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.

தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவையலாக அரைக்கவும்.

அடுத்ததாக, ஒரு சிறிய கடாயில் மீதமுள்ள ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.

கடுகு சேர்த்து பொரிந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த துவையலில் சேர்க்கவும். 

பரிமாறும் முறை:

இந்த வாழைக்காய் தோல் துவையல் சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த துவையலை ஃபிரிட்ஜில் 2-3 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

இப்படி, ஒரு துவையலை செய்து சாப்பிட்டுப் பாருங்க இனி வாழைக்காய் தோலைத் தூக்கிப் போட மனமே வராதுங்க...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com