

அப்பத்தை பலவிதமாகச் செய்யலாம். அரிசி, உளுந்து மாவில் செய்யலாம். மைதா அதனுடன் ரவை, கோதுமை கலந்தும் செய்யலாம். சிறுதானிய மாவுகளிலும் வெல்ல கரைசலை ஊற்றி செய்யலாம். இவை அனைத்தும் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும்.
ஆனால் சட்டென்று செய்து பத்தே நிமிஷத்தில் பரிமாறக்கூடிய எளிமையான கோதுமை அப்பம் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.
கோதுமை அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- இரண்டு கப்
நாட்டு சர்க்கரை -ஒரு கப்
தண்ணீர்- முக்கால் கப்
ஏலக்காய் பொடித்தது -இரண்டு
உப்பு- ஒரு சிட்டிகை
சோடா பவுடர் -இரண்டு சிட்டிகை
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
நாட்டு சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் உள்ள தூசு, கல், மண்ணை சுத்தம் செய்து வடிகட்டவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து , அதில் வடிகட்டிய சர்க்கரை கரைசலை சூடாக ஊற்றி கட்டி இல்லாமல் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் மூடி போட்டு மூடிவைக்கவும்.
பிறகு அந்த மாவைத் திறந்து அதில் உப்பு, ஏலப்பொடி, சோடா பவுடர் சேர்த்து மாவை நன்றாக அடித்து கலக்கவும். சோடா பவுடர் எல்லா பக்கத்திலும் கலந்து இருக்க வேண்டியது அவசியம்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, சூடானதும் தேவையான எண்ணெயை ஊற்றி எண்ணெய்யை நன்றாக சூடாகவும். சூடான பிறகு ஐந்தாறு அப்பங்களாக ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு அதில் மாவை ஊற்றி அவற்றை மிதமான தீயில் வேகவிடவும். இரண்டு பக்கமும் நன்றாக திருப்பி போட்டு அப்பம் நன்றாக வெந்தவுடன், கலர் பொன்னிறமாக மாறி வரும்பொழுது எடுத்து வைக்கவும். கோதுமை அப்பம் ரெடி.
கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
கோதுமை அப்பம் செய்யும்பொழுது மாவுடன் கைப்பிடி அளவு தேங்காய் துருவி சேர்க்கலாம். அல்லது தேங்காயை பற்களாக சீவியும் சேர்க்கலாம். முந்திரிப்பருப்பையும் ஒடித்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்து செய்யலாம். அப்பத்தை சாப்பிடும் பொழுது இதை பற்களில் கடிபட்டு அலாதியான ஒரு ருசியைத் தரும்.
நாட்டு சர்க்கரைக்கு பதில் சர்க்கரையையும் சேர்த்து செய்யலாம். இதில் எதை சேர்த்து செய்தாலும் நீரில் சர்க்கரையை கலந்து அடுப்பில் வைத்து சர்க்கரை நன்கு கரைந்தவுடன் அதை சூடாக மாவில் ஊற்றி கலக்க வேண்டியது அவசியம். அப்ப மாவு கட்டி இல்லாமல் இருக்கவேண்டும்.
கோதுமை அப்பத்தை வேகவிடும் பொழுது தீயை ஒரே சீராக வைக்க வேண்டியது அவசியம். மிதமான தீயில் வைத்தால்தான் எல்லா பக்கமும் நன்றாக வெந்து உள்ளுக்குள்ளும் வெந்து இருக்கும். பிய்த்துப் பார்த்தால் உள்ளுக்குள் ஸ்பாஞ்ச் போல் இருப்பதை காணமுடியும்.
தீயை குறைத்து வைத்தால் நன்றாகவும் உப்பாது. எண்ணெய்யும் அதிகம் குடிக்கும். அதிக தீயில் வைத்தால் அப்பத்தின் மேல் பகுதி கருகியும், உள்பகுதியில் வேகாமலும் இருக்கும். ஆதலால் மிதமான தீயில் வைத்து அதன் எண்ணெயின் சடசடப்பு அடங்கியவுடன் எடுத்தால் அப்பம் ருசிக்கும்.
வீட்டில் இருக்கும் பணியாரக் குழிகளிலும் இந்த அப்பத்தை ஊற்றி எடுக்கலாம். இதனால் எண்ணெய்யும் குறைந்த அளவே செலவாகும். அப்பங்களின் அளவும் ஒரே சீராக இருக்கும்.