
சம்மர் வந்தாலே மாம்பழ சீசனும் சேர்ந்தே வந்து விடும். அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கி பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க. வாங்க இன்று மாம்பழ கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை அல்லது கோதுமை ரவை - அரை கப்
பழுத்த மாம்பழம் - 1
நாட்டு சர்க்கரை - 1 கப்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை - தேவையான அளவு
டூட்டி ஃப்ரூட்டி, வெள்ளரி விதை - தேவையான அளவு
செய்முறை :
மாம்பழத்தை தோல் நீக்கி மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
கொஞ்சம் மாம்பழத்தை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
கடாயில் கால் கப் நெய், 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளவும்.
அதே கடாயில் ரவை அல்லது கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்களில் வறுக்கவும்.
பின்னர் அரை கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் நன்றாக கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
ரவை நன்றாக வெந்ததும் அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சர்க்கரை நன்றாக இளகி வரும் போது மீண்டும் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளவும்.
அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நெய் ஓரங்களில் பிரிந்து வந்ததும் அதில் டூட்டி ஃப்ரூட்டி, வெள்ளரி விதை, வறுத்த பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, பொடியாக நறுக்கிய மாம்பழம் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான மாம்பழ கேசரி ரெடி.
விருப்பம் உள்ளவர்கள் ஏலக்காய் சேர்க்கலாம். ஆனால் ஏலக்காய் சேர்த்தால் மாம்பழத்தின் சுவை குறைந்து விடும் என்பதால் நான் சேர்க்கவில்லை.
இந்த கேசரி எவ்வளவு நேரம் ஆனாலும் கட்டியாகாமல் தளர்வாக இருக்கும்.