
இனிப்பு சுவையுடன் கூடிய sweet potato என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு, ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் வைட்டமின்கள் ஏ, பி6, சி, டி, மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது இருதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
National Library of Medicine ஆய்வின் படி சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்துகளில் பாதி கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதால், போதுமான அளவு கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க ஒரு சிறந்த வழியாகும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை குளிர் காலத்தில் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் குளிர்காலத்தில் இதை சாப்பிடும் போது அது உங்கள் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. வேக வைத்து சாலட் போன்று சாப்பிடும் போது சர்க்கரைவள்ளிக்கிழங்கின் சத்து முழுவதும் கிடைக்கும்.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கேழ்வரகு சப்பாத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 150 கிராம்
கேழ்வரகு மாவு - 1 கப்
சீரகம்- கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
கரம்மசாலா தூள்- கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள்- சிறிதளவு
தனி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மசித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை போட்டு, அதனுடன் கேழ்வரகு மாவு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் துணி போட்டு மூடி வைக்கவும்.
* அரை மணிநேரம் கழித்து மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு நெய் தடவி முன்னும், பின்னும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* இப்போது சத்தான சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு கேழ்வரகு சப்பாத்தி ரெடி.
* இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் வெள்ளரிக்காய் ரைத்தா தொட்டுக்கொள்ளலாம் சூப்பராக இருக்கும்.