
இந்திய உணவுகளின் அலாதி சுவை அதன் மசாலாப் பொருட்களில் அடங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு மசாலா பொருட்களிலும் உள்ள தனித்துவம், உணவுக்கு சுவையை வழங்குகின்றன. காரமான சிவப்பு மிளகாய் முதல் நறுமணம் தரும் கிராம்பு வரை, நமது உணவின் சுவையை மட்டுமல்ல, நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் வடிவமைத்துள்ளன. இவற்றில் மிளகு நமது உணவுகளில் தனி இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிளகில் உள்ள அதிகளவிலான நன்மைகளுக்காக மக்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்கின்றனர். காரத்திற்காக மிளகாயை சேர்ப்பதற்கு பதில் அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மிளகை சேர்க்கும் எண்ணம் தற்போது மக்களிடையே அதிகரித்து வருவதை காண முடிகிறது. டயட் உணவுகள், சூப், சாலட் போன்ற உணவுகளில் மிளகு அதிகம் சேர்க்கப்படுகிறது.
கருப்பு மற்றும் வெள்ளை மிளகு ஒரே தாவரத்திலிருந்து வந்தாலும் அவை வெவ்வேறு சுவைகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. கருப்பு மிளகு பொதுவாக வெள்ளை மிளகை விட காரமானது. அதே சமயம் வெள்ளை மிளகு லேசானது மற்றும் அதிக மண் சுவை கொண்டது.
கருப்பு மிளகை சூடான சூப் மற்றும் அசைவ உணவின் மேல் தூவுவதன் மூலம் அதன் சுவையை கூட்டுகிறது. வெள்ளை மிளகு கிரீமி சூப்கள் அல்லது வெள்ளை சாஸ்கள் போன்ற லேசான உணவுகள் தயாரிக்க மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு மற்றும் வெள்ளை மிளகின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளில் சில வேறுபாடுகள் உள்ளன. கருப்பு மிளகின் வெளிப்புற தோலில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. வெள்ளை மிளகு கருப்பு மிளகின் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளைப் பகிர்ந்து கொண்டாலும் அதன் வெளிப்புற அடுக்கு அகற்றப்படுவதால் குறைவான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மிளகுத்தூளில் பொதுவாக, பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் நல்ல மூலங்கள் அதிகளவு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கருப்பு மற்றும் வெள்ளை மிளகு இரண்டும செரிமானத்தை ஊக்குவித்து உணவை ஜீரணிக்க உதவி செய்கிறது. சில ஆய்வுகள் கருப்பு மற்றும் வெள்ளை மிளகு வலி நிவாரணி பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக பரிந்துரைத்துள்ளன.
வெள்ளை மிளகுடன் ஒப்பிடும்போது கருப்பு மிளகில் அத்தியாவசிய எண்ணெய்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உள்ளடக்கம் அதிகளவு உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை மிளகு இரண்டிலும் கலோரிகள் மிகவும் குறைவு. அதாவது ஒரு டீஸ்பூன் கருப்பு அல்லது வெள்ளை மிளகுத்தூளில் பொதுவாக 5 கலோரிகளுக்கும் குறைவாகவே உள்ளது. மேலும் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைந்த அளவே உள்ளன. அதுமட்டுமின்றி வெள்ளை மற்றும் கருப்பு மிளகில் மாங்கனீசு, இரும்பு மற்றும் வைட்டமின் கே போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் உள்ளன.
வெள்ளை மிளகு விரைவாக கெட்டுப்போகும் தன்மை கொண்டது; ஏனெனில் வெள்ளை மிளகை பதப்படுத்தும் போது அதன் வெளிப்புற தோலை நீக்கிவிடுவதால் நாளடைவில் அதன் நறுமணத்தையும் சுவையையும் இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. வெள்ளை மிளகின் தரம் மற்றும் சுவை கெட்டு போகாமல் பாதுகாக்க காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். நீங்கள் வெள்ளை மிளகை எந்த வடிவத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அது கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். அதாவது முழு வெள்ளை மிளகை சுமார் மூன்று ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம். ஆனால் வெள்ளை மிளகுத்தூள் மூன்று மாதங்களில் அதன் தரம் மற்றும் சுவையை இழந்துவிடும்.
அதேசமயம் கருப்பு மிளகு, அதன் புத்துணர்ச்சி மற்றும் வலுவான நறுமணத்தை நீண்ட காலத்திற்கு பராமரிக்கும் வெளிப்புற தோல் அடுக்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.