நலமான வாழ்விற்கு: இஞ்சி, துளசி முதல் வல்லாரை வரை... 7 ரெசிபிகள்!

natural recipes tips
Recipes for food items using herbs
Published on

மூலிகை இலைகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், நம் சமையலிலும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். மூலிகைகள் உபயோகித்து தயாரிக்கப்படும் 7 வகை உணவுப் பொருட்களின் ரெசிபிகள் இங்கே.

இஞ்சி - துளசி பானம்:

இரண்டு கப் தண்ணீரில் 10-12 துளசி இலைகளைப் போட்டு கொதிக்க வைக்கவும். அதனுடன் ஒரு அங்குல துண்டு இஞ்சியை நசுக்கிப் போடவும். 4 மிளகையும் சேர்த்து வாசனை வரும்வரை, சுமார் 7-8 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி எடுக்கவும். சிறிது ஆறிய பின் அரை டீஸ்பூன் தேன் சேர்க்கவும். விரும்பினால் கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அருந்தவும். இது இரைப்பை குடல் பாதையை சிறப்பாக்கி, நெஞ்சுப் பகுதியை சுத்திகரிக்க உதவும்.

மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்த மூன் மில்க்:

ஒரு கப் பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், ¼ டீஸ்பூன் நெய், துளியூண்டு ஜாதிக்காய் பவுடர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கலக்கவும். பின் சுவைக்கு பொடித்த வெல்லம் சேர்த்து இரவில் படுக்க செல்லும் முன் குடிக்கவும்.

நெல்லிக்காய்-கொத்தமல்லி சட்னி:

4 நெல்லிக்காய்களை விதை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். அதை ஒரு கப் கொத்தமல்லி இலை, ஒரு பச்சை மிளகாய், ½ டீஸ்பூன் வறுத்த சீரகம், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்தெடுக்கவும். நன்கு பசியை தூண்டும் சட்னி.

இதையும் படியுங்கள்:
பத்தே நிமிடத்தில் சின்ன வெங்காய காரக் குழம்பு: மணமும் சுவையும்!
natural recipes tips

வேப்பம் பூ ரசம்:

ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி அதில் அரை டீஸ்பூன் கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் இரண்டு டீஸ்பூன் உலர்ந்த வேப்பம் பூவை சேர்த்து வறுக்கவும். பிறகு அதில் ஒரு தக்காளிப் பழத்தை நறுக்கிப் போட்டு, ஒரு கப் நீர்த்த புளித் தண்ணீர் சேர்த்து, ½ டீஸ்பூன் ரசப்பவுடர், உப்பு, சிறிது வெல்லம் போடவும். 6-7 நிமிடம் கொதிக்கவிடவும். சிறிது ஆறியவுடன் கால் டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து, அருந்தவும்.

பாசிப் பருப்பு-முருங்கை இலை கூட்டு:

1½ கப் தண்ணீரில் ½ கப் பாசிப் பருப்பு சேர்த்து வேக விடவும். அதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கப் முருங்கை இலை, உப்பு சேர்க்கவும். முருங்கை இலை வெந்ததும், ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி அதில் அரை டீஸ்பூன் சீரகம், சிறிது பெருங்காயம், இரண்டு பல் பூண்டு, நான்கு மிளகு ஆகியவை சேர்த்து தாளித்து கூட்டில் கொட்டவும். ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கூட்டு தயார்.

வல்லாரைக் கீரை-தேங்காய் சட்னி:

½ கப் துருவிய தேங்காய், ¼ கப் வல்லாரைக் கீரை இலைகள், ஒரு பச்சை மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த சன்னா டால், உப்பு மற்றும் சிறிது லெமன் ஜூஸ் ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்தெடுக்கவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும். சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் தொட்டுக்கொள்ள ஏற்ற சட்னி.

இதையும் படியுங்கள்:
பத்தே நிமிடத்தில் சின்ன வெங்காய காரக் குழம்பு: மணமும் சுவையும்!
natural recipes tips

சீந்தில் (giloy) கொடி-துளசி இலைகள் சேர்த்த ஆரோக்கிய பானம்:

2 இஞ்ச் நீள ஜிலோய் தண்டுகளை நறுக்கி அதனுடன் ஐந்து துளசி இலைகள், ஒரு லவங்கம் ஆகியவற்றை சேர்த்து இரண்டு கப் தண்ணீரில் போட்டு, ஒரு கப் அளவுக்கு சுருங்கி வரும் வரை கொதிக்கவிடவும். பின் வடிகட்டி கஷாயத்தை பிரித்தெடுத்து, சிறிது ஆறியவுடன் ¼ டீஸ்பூன் தேன் சேர்த்து வாரம் இருமுறை குடித்து வரவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com