
1. சவுத் இந்தியன் குடுமுலு ரெசிபி
தேவையான பொருட்கள்:
நறுக்கிய அவரைக்காய் அல்லது பீன்ஸ் - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடுகு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - ½ கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேர்ந்தெடுத்த காயை (அவரை அல்லது பீன்ஸ்) உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கவும். காய் வெந்தவுடன் அரைத்த பேஸ்ட்டை அதனுடன் சேர்த்து கலந்து விடவும். பின் அரிசி மாவை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
அதில் கொத்தமல்லி இலைகள் மற்றும் கடுகு தாளித்துக் கொட்டிப் பிசையவும். சப்பாத்தி மாவு மாதிரி வந்ததும் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி எடுத்து அதை வட்ட வடிவ அல்லது சிலிண்டர் வடிவ கட்லெட்களாக ஆக்கவும். அவற்றை இட்லி தட்டுகளில் அடுக்கி ஆவியில் வேக வைக்கவும்.
வெந்த பின் இந்த குடுமுலுகளை சாஸ் தொட்டு உண்ணவும்.
2. சவுத் இந்தியன் பீட்ரூட் இலை போண்டா ரெசிபி:
தேவையான பொருட்கள்:
நன்கு கழுவி பொடியாக நறுக்கிய பீட்ரூட் இலை - ¾ கப்
நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - ½ கப்
மிளகாய்த் தூள் - 1½ டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
மேலே கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்த பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக ஆக்கிக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த போண்டாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டு போண்டாவை சூடாக சாப்பிடவும்.