
1) அவல் ஸ்பான்ஞ் தோசை:
தேவையான பொருள்கள்:
அவல் 1 கப்,
புழுங்கலரிசி 2 கப்,
புளித்த மோர் 2 கப்,
உப்பு தேவையானது.
செய்முறை:
கெட்டி அவல் ஒரு கப் எடுத்து ஒரு மணி நேரம் ஊற விடவும். புழுங்கல் அரிசியை ரெண்டு கப் மோர், சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் தனியாக ஊறவைக்கவும். பிறகு இவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். தேவையான உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து சிறிது கனமான ஊத்தப்பம் போல் தோசை வார்க்க பட்டுட்டாக ஸ்பாஞ்சு போல் தோசை அருமையாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்கொள்ள வர மிளகாய் சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
2) வர மிளகாய் சட்னி:
தேவையான பொருள்கள்:
காய்ந்த மிளகாய் 10,
காஷ்மீரி மிளகாய் 4,
உப்பு தேவையானது,
புளி சிறிய எலுமிச்சையளவு,
பெருங்காயத்தூள் சிறிது,
வெல்லம் ஒரு துண்டு.
தாளிக்க:
கடுகு,
உளுத்தம் பருப்பு,
நல்லெண்ணெய் ஒரு கப்.
செய்முறை:
சூடான நீரில் காம்புகளை நீக்கிய காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய்களை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும். காஷ்மீரி மிளகாய் சட்னிக்கு நல்ல கலரை கொடுக்கும். 15 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துக் கொட்டாமல் அரைத்துக் கொள்ள உபயோகிக்கவும். மிளகாய், உப்பு, புளி, வெல்லத் துண்டு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, 4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு இரண்டு நிமிடம் கிளறி இறக்க மிகவும் ருசியான வரமிளகாய் சட்னி தயார்.
உப்பு, புளிப்பு, காரம் என மிகவும் ருசியாக இருக்கும்.
3) முள்ளங்கி இலைத் துவையல்:
முள்ளங்கி இலைகள் நறுக்கியது 1 கப்,
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் 4,
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்,
புளி நெல்லிக்காய் அளவு
தாளிக்க :
கடுகு,
உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை,
நல்லெண்ணெய்
செய்முறை:
முள்ளங்கி வாங்கும் போது அதன் இலைகளுடன் சேர்த்து வாங்கவும். இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலை சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது ஆறியதும் உப்பு, புளி சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். தண்ணீர் அதிகம் விடாமல் கெட்டி துவையலாக அரைத்து எடுத்தால் தோசை, இட்லிக்கு தொட்டுக் கொள்வதுடன் சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.