
கோடை காலம் வந்தாலே போதும் பலருக்கும் தாகம் எடுக்க ஆரம்பித்துவிடும். என்ன சாப்பிட்டாலும் பிடிக்கவில்லை என்று பலரும் அடிக்கடி தயிர் சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். வெயிலுக்கு ஏற்ப என்ன சமைக்கலாம் என்ற கவலைக்கு இந்த டிஷ் நிச்சயம் உதவியாக இருக்கும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. கோடையில் இந்த வெள்ளரிக்காயை அதிகம் உட்கொள்ளும் போது தாகம் தணிவதோடு, உடலும் நீரேற்றத்துடன் இருக்கும்.
வெள்ளரிக்காய் நிச்சயம் கோடை காலத்தில் ஒரு சூப்பர் உணவாகவே கருதப்படுகிறது. அதை வைத்து ஏன் வீட்டில் சாம்பார் செய்யக்கூடாது. எந்த காய்கறிகளை வைத்து சாம்பார் செய்தாலும் அதை சுவை அட்டகாசமாகவே இருக்கும். முள்ளங்கி போட்டால் அது ஒரு சுவையை தரும். பூசணிக்காயை போட்டால் அது ஒரு தனி சுவையை தரும். அப்படி தான் வெண்டைக்காய், கத்திரிக்காய் சாம்பார் என ஒவ்வொன்றிக்கும் தனித்துவம் உண்டு. அந்த வகையில் வெள்ளரி சாம்பாரும் நிச்சயமாக சூப்பராக இருக்கும். வெயிலுக்கும் இதமாக இருக்கும். அது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை தண்ணீர் - 2 கப்
சாம்பார் மசாலாவிற்கு - எண்ணெய் - 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், மல்லி - 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், வரமிளகாய் - 5, காஷ்மீரி வரமிளகாய் - 2, துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
தாளித்து வதக்க - எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 2 கொத்து, சின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது), வெள்ளரிக்காய் - 1/4 கிலோ (விதைகளை நீக்கி துண்டுகளாக்கப்பட்டது), தண்ணீர் - 1 1/2 கப், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் கழுவிய துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, மசித்து கொண்டு பருப்பை மசித்து விட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, மல்லி, வெந்தயம், பெருங்காயத் தூள், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும். அதன் பின் அதில் தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க வேண்டும். அதன் பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட வெள்ளரிக்காயை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி மூடி வைத்து 6-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பின் மூடியைத் திறந்து, அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதில் கொதித்த புளி நீர் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கிளறி ஒரு கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் தயார்.